அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்: நில அளவை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவுநீர்நிலைகளில் செய்யப்படும் ஆக்கிரமிப்புகளைத் தொடக்கத்திலேயே அகற்ற வேண்டுமென வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக் கொண்டார். சென்னை சேப்பாக்கத்தில் நில அளவைத் துறை அதிகாரிகளுடன் அவர் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். ஆன்லைன் பட்டா வழங்குதல், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றம், வளர்ச்சி திட்டப் பணிகள், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு துறை ரீதியான பணிகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. நில அளவை துறையை முழுமையாக கணினி மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி வால்பாறை, கொல்லிமலை ஆகிய இரு வட்டங்களில் முதல் கட்டமாக அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் மேலாண்மையைப் பொருத்தவரை ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளின் நிலங்களின் அளவீடுகளை சரியாக பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளதுஇந்தப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதனை தொடக்கத்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மழையின் மூலம் தேவையான நீர் கிடைக்கும் பட்சத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நீங்க வழி ஏற்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, கஜா புயல் மறுவாழ்வு திட்ட இயக்குநர் டி.ஜெகநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.