காவல்துறையில் வெகுநாள்கள் பணிபுரிந்து, புதிதாகக் காவல்துறையில் சேருபவர்களுக்கு ரோல்மாடல் சிங்கங்களாக வலம் வரும் சில காவல்துறை அதிகாரிகள் குறித்த மினி ரிப்போர்ட்:
சைலேந்திர பாபு இந்தப் பட்டியலில் அறிமுகமே தேவைப்படாத அதிகாரி. தமிழக காவல்துறையில் பணிபுரியும் மற்றும் பணிபுரிய ஆர்வமாகக் காத்திருக்கும் முயற்சி செய்யும் பல பேருக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார் ஐ.பி.எஸ் அதிகாரி சைலேந்திர பாபு. 1989-ல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 1992-ல் காவல்துறை கண்காணிப்பாளர், 2001-ல் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல், 2006-ல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆகிய பொறுப்புகளை வகித்த இவர் தற்போது ரயில்வேயில் போலீஸ் கூடுதல் இயக்குநர் ஜெனரலாக உள்ளார். 57 வயதானாலும் கட்டுக்கோப்பான உடலுக்குக் காரணம் இவரது உடற்பயிற்சிதான். எந்த ஒரு பிரச்னையானாலும் அதை நேர்த்தியாகக் கையாளுபவர், மிகவும் பொறுமைசாலி, பொதுமக்களிடம் எளிமையாகப் பழகும் குணமுடையவர். கடலூரில் வகுப்புவாதக் கலவரங்கள் தடுப்பு, நக்ஸலைட் என்கவுன்டர், யானைத் தந்தம் வெட்டியவர்கள் கைது, 1997-ம் ஆண்டு சிவகங்கையில் ஏரியில் கவிழ்ந்த பேருந்தில் இருந்து 18 நபர்களை உயிருடன் காப்பாற்றியது போன்ற இவரது சாதனைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. முதலமைச்சர் பதக்கம், வீரப்பதக்கம், பிரதமர் பதக்கம், ஜனாதிபதி விருது, ஜனாதிபதி போலீஸ் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். விளையாட்டு மட்டுமல்லாமல் நீச்சல், தடகளம், துப்பாக்கிச் சுடுதல், சைக்கிளிங் போன்றவற்றில் தீவிர பங்களிப்பால் நீச்சலுக்காகத் தேசிய போலீஸ் அகாடமி மூலம் ஆர்.டி.சிங் கோப்பையைப் பெற்றுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது நீச்சலடித்து பலரைக் காப்பாற்றினார். தனுஷ்கோடி இடையிலான பாக்ஜலசந்தி கடற்பகுதியில் 28.5 கி.மீ தூரத்தை 12.14 மணி நேரத்தில் சைலேந்திரபாபு தலைமையிலான 10 போலீஸார் நீந்திக் கடந்தனர்.