நெல்லையில் அபாய நிலையில் அரசு மாணவியர் விடுதி
நெல்லை டவுனில் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளே ஆன நிலையில், அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி எந்நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு, தரைத்தளங்கள் பூமிக்குள் புதைந்து வருகின்றன. நெல்லை டவுன் தென்பத்து சாலையில் பள்ளி மாணவியர்களுக்கான பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் டவுன் கல்லணை, மந்திரமூர்த்தி, சாப்டர் மற்றும் சுற்றுவட்டார பள்ளி மாணவிகள் 52 பேர் தங்கியிருந்து படித்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு, ஸ்ரீவைகுண்டம், திண்டுக்கல், பழனி உள்ளிட்ட இடங்களை சேர்ந்த மாணவிகளும் இங்கு தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 8-2-2016ம் தேதியன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இவ்விடுதி கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. புதிய விடுதிக்கு குடிவந்த மாணவிகள் இரு மாதங்களுக்குள் கட்டிடம் பாதுகாப்பின்மையை உணர்ந்தனர். ஏனெனில் மாணவிகளின் கழிப்பறை 3 ஆண்டுகளுக்கு முன்னரே பழுதடைந்தது. தங்கும் அறைகளிலும் கற்கள் பெயர்ந்தன. விடுதியின் கட்டிடங்கள் பல இடங்களில் விரிசல் விழுந்து காணப்படுகிறது. சமையலறையும், பொருட்கள் வைக்கும் அறையும் எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற அபாயம் நிலவுகிறது. மாணவிகள் படுக்கை அறை தரைதளங்கள் பெயர்ந்து நாளுக்குள் பூமிக்குள் புதைந்து கொண்டே இருக்கிறது. இதனால் மாணவிகள் வெளிப்புற முற்றங்களிலும், மாடியில் உள்ள ஒரு அறையிலும் இரவில் தூங்கச் செல்கின்றனர். தரைதளங்கள் பெயர்ந்த இடங்களில் பாம்பு, பல்லி, பூரான் உள்ளிட்ட விஷஜந்துக்கள் புகுந்து வருகின்றன. இதனால் மாணவிகள் அச்சத்தோடு நடமாட வேண்டியதுள்ளது. சுவற்றில் காணப்படும் மெகா விரிசல்களிலும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது.விடுதிக்கான கழிவறைகளில் 3ல் தற்போது ஒன்று மட்டுமே செயல்பாட்டில் உள்ளது. 52 மாணவிகளும் அந்த ஒரு கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். இரண்டு குளியல் அறைகளுமே தரைதளங்கள் பெயர்ந்து சின்னாபின்னமாக காட்சியளிக்கின்றன. இதனால் மாணவிகள் குளியலறையில் குளிக்க முடிவதில்லை. வளாகத்தில் உள்ள வெளி தண்ணீர் தொட்டியில் மாணவிகள்குளிக்கும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ஏனெனில் விடுதிக்கான காம்பவுண்ட் சுவர்கள் மிகவும் தாழ்ந்து காணப்படுகின்றன. எனவே மாணவிகள் குளிக்கும்போது அருகிலுள்ள குடியிருப்புகளில் இருந்து இளைஞர்களின் கேலியும், கிண்டலும் தொடர்கிறது. சமீபத்தில் ஒரு மாணவர் செல்போனில் குளிக்கும் மாணவிகளை படம் எடுத்ததால் மாணவிகள் விடுதிக்குள் அழுது புரண்டனர். இப்புகார் வார்டன் வரை சென்று விசாரணையில் உள்ளது. வெட்கம் தாங்காமல் சில மாணவிகள் அதிகாலை 4 மணிக்கு எழுந்து இருட்டில் குளித்து விட்டு செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தை வாட்டி வதைக்கும் வறட்சி பிற்படுத்தப்பட்டோர் விடுதியையும் விட்டு வைக்கவில்லை. மாணவிகள் தங்களுக்கான குடிநீரை அடிபம்பு மூலம் பெற வேண்டும். ஆனால் குறைந்த அளவு தண்ணீரே வருவதால் மாணவிகள் அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சொல்லொண்ணா துயரங்களுடன் படித்து வரும் மாணவிகளின் துயரங்களை நீக்கிட அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிர் பலி வாங்க காத்திருக்கும் கட்டிடத்தில் இருந்து மாணவிகளை மாற்றிவிட்டு, நல்ல தரமான கட்டிடத்தில் அடிப்படை வசதிகளோடு மாணவிகள் கல்வி பயில ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.