சென்னையில் நஷ்டத்தில் இயங்குகிறதா அம்மா உணவகங்கள்? ஆய்வு செய்ய குழு அமைத்தது மாநகராட்சி,.. விரைவில் அரசுக்கு அறிக்கை -

சென்னையில் நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களில் உணவு மற்றும் செயல்பாடுகளை மாற்றம் செய்வது தொடர்பாக ஆய்வு செய்ய குழுஅமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்த குழு விரைவில் அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.சென்னை மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் வீதம் 200 வார்டுகளில் மொத்தம் 400 அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இதை தவிர்த்து, முக்கிய மருத்துவமனைகளில் 7 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் காலை நேரங்களில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் உள்ளிட்ட பல வகை சாதங்களும், இரவில் சப்பாத்தி உள்ளிட்ட உணவு பொருட்களும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கும் பிறகு, அம்மா உணவங்கள் முறையாக செயல்படுவதில்லை என்று பொது மக்கள் கருத்து | தெரிவித்தனர். மேலும் அம்மா உணவகங்களில் இருந்து பலர் பார்சல் வாங்கி செல்வதாகவும், இதனால் பசியோடு வரும் பொதுமக்களுக்கு உணவு கிடைக்காமல் திரும்பி செல்வதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களில் பார்சல் வழங்க தடை விதிக்கப்பட்டது. இதையும் மீறி பார்சல் வழங்கினால் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகத்தை லாபத்தில் இயக்குவது தொடர்பாகவும், அதன் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு தொடர்பாகவும் ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மதுசுதன்ரெட்டி உத்தரவிட்டுள்ளார். தற்போது சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களை இயக்குவதற்கு ஆண்டு ஒன்றுக்கு 140 கோடி வரையில் செலவாகிறது. ஆனால் அம்மா உணவகங்கள் மூலம் 30 முதல் 40 கோடி ஆண்டு வருமானம் கிடைக்கிறது. இதன்படி, பார்த்தால் ஆண்டு ஒன்றுக்கு சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் மூலம் மட்டும் 100 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இந்நிலையில் இதை ஈடுகட்டவும் வாருவாயை அதிகரிப்பது தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்து உள்ளது. இந்த குழுவின் துணை தலைவராக மாநகர நல அலுவலர் செந்தில்நாதன், உறுப்பினர் செயலளராக கூடுதல் மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூடுதல் மாநகர நல அலுவலர் (தெற்கு) மகாலட்சுமி, 15வது மண்டல அலுவலர் கார்த்திகேயன், 7 வது மண்டல அலுவலர் ஷீலா, சுகாதார அலுவலர்கள் சேவியர் அருள்ராஜ், வெங்கடேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 7 பேர் கொண்ட இந்த குழு, சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் செயல்பாடுகள், நஷ்டத்தை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், லாபத்தை ஈடுட்ட புதிய உணவுகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கை அரசுக்கு சமர்பிக்கப்படும். அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் புதிய உணவுகள் அம்மா உணவகத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்