போக்குவரத்துறை மீதான விவாதத்தில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே காரசார விவாதம்
போக்குவரத்துறை மீதான விவாதத்தில் அதிமுக மற்றும் திமுகவினரிடையே காரசார விவாதம் ஏற்பட்டு அமளி உண்டானது.போக்குவரத்துறை தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக எம்.எல்.ஏ வி.ஜி.ராஜேந்திரன், "சமீபத்தில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று கிராமசபைக் கூட்டம் நடத்தினோம். பெரும்பாலான கிராமசபைக்கூட்டங்களில் பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை தான் மக்களிடம் இருந்து பரவலாக வந்தது. பல வழித்தடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது” என்றார்.அதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், " 500 பேர் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு கூட பேருந்து சேவை உள்ளது. பள்ளிக்கு குழந்தைகள் செல்ல ஏதுவாக பேருந்துகள் இயக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலால் இயக்கப்படுகிறது” என்றார். அத்துடன், “மக்கள் பயன்பாடே இல்லாத வழித்தடங்களில் மட்டுமே ஓரிரு பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குறிப்பாக 1000 குடியிருப்புகள் இருந்தால் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று விதி இருந்தாலும், 500 பேர் கொண்ட மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கே பேருந்துகள் இயக்கப்படுகின்றன” என்று அமைச்சர் குறிப்பிட்டார்.இதையடுத்து பேசிய வி.ஜி.ராஜேந்திரன், "கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் விலையேற்றியும் போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்குகின்றன. பல்வேறு காரணங்கள் இருந்தாலும், நிர்வாக திறன் இருந்திருந்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டிருக்கலாம்” என்றார். பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “நிர்வாக திறன் குறித்து உறுப்பினர் கூறுகிறார். அதே நிர்வாகத் திறனோடு இருந்திருந்தால் திமுக ஆட்சியில் இருந்து செல்லும்போது லாபத்தோடு விட்டு சென்றிருக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வுக்கு, டீசல் கட்டண உயர்வு மற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளது” என்றார். இந்த காரசார விவாதத்தால் அவையில் அமளி ஏற்பட்டது. சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற அமளி தொடர்ந்தது. போக்குவரத்து துறை மீதான விவாதம் நடைபெறும் போது முன்னாள் போக்குவரத்து அமைச்சர்கள் கே.என்.நேரு இல்லை, செந்தில் பாலாஜி ஆகியோர் இல்லை. மேலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை தலைவர் துரை முருகனும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.