சரத்குமார், ராதிகாவுக்கு வாரன்ட்: சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
சென்னை : ரூ.2 கோடி கடன் பெற்ற வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரின் மனைவி நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு வாரன்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃபிரேம்ஸ் நிறுவனத்தின் சார்பில், ராடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து கடந்த 2014ம் ஆண்டு ஒன்றாரை கோடி ரூபாய் கடன் காசோலை மூலம் வாங்கியுள்ளனர். மேலும் ரூ.50 லட்சம் ரொக்கமாகவும் இருவரும் பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய பணத்தை ராதிகா மற்றும் சரத்குமார் திருப்பி வழங்கவில்லை . இதனால் அவர்களுக்கு எதிராக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ராடியன்ஸ் நிறுவனம் சார்பில் கிரிமினல் வழக்கு தொடரப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் சரத்குமார், மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. அதன்படி இந்த வழக்கு சைதாப்பேட்டை 3-வது விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆஜராகவில்லை . எனவே இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர கூடிய கைது வாரண்ட பிறப்பித்த நீதிபதி வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.