சிதம்பரத்தில்பத்திர பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தீவிர சோதனை
சிதம்பரத்தில் உள்ள மாவட்ட பத்திர பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரம் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் நிலப்பத்திர பதிவு, பிறப்பு, இறப்பிற்கான பதிவு, திருமண பதிவுகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகிறது. இந்த அலுவலகத்தில், பத்திரப்பதிவு மற்றும் இதர பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கிடைத்தது.அதனை தொடர்ந்து நேற்று மாலை 6:45 மணியளவில், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், சிதம்பரம் பதிவாளர் அலுவலகத்திற்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., மெல்வின் ராஜாசிங்க் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், திருவேங்கடம், மாலா உள்ளிட்ட குழுவினர், மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்குள் திடீரென புகுந்துனர். அலுவலகத்தில் கதவு, ஜன்னல்கள் அனைத்தையும் மூடி விட்டு, தீவிர சோதனை மேற்கொண்டனர்.அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத ரூ. 43 ஆயிரம் பணத்தை போலீசார் கைப்பற்றி, பணியில் இருந்த இணை பதிவாளர் மணிவண்ணன் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்