ராம்நாட் முண்டு' மிளகாய்க்கு உலகத் தரச்சான்று!’ - நவாஸ்கனி எம்.பி கேள்வியும் மத்திய அரசின் பதிலும்

பரமக்குடி மிளகாய்க்கு உலகத் தர நிர்ணய முத்திரை பெறுவது தொடர்பாக மக்களவையில் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி எழுப்பிய கேள்விக்கு மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு கடிதம் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையும் மிளகாய்களுக்குத் தனிச் சிறப்பு உண்டு. அதிலும் முண்டு எனப்படும் குண்டு மிளகாய்க்கு மக்களிடையே தனி வரவேற்பு உண்டு. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்களம், கமுதி, நயினார் கோயில் உள்ளிட்ட தாலுகாக்களில் பெருமளவு விளைவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மிளகாய்களுக்கு உலக அளவில் தர முத்திரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மிளகாய் விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்தனர்.மிளகாய் விவசாயிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பாக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், `பரமக்குடி மிளகாய்க்கு உலகத் தர நிர்ணய முத்திரை பெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யும்' எனத் தெரிவித்துள்ளார். மேலும், `இந்தியாவில் விளையும் மொத்த மிளகாய் அளவில் ஒரு சதவிகிதம்தான் தமிழ்நாட்டின் பங்களிப்பாகும். எனினும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கையை ஏற்று சில நடவடிக்கைகளில் ஈடுபட அரசு தீர்மானித்திருக்கிறது. மிளகாய்த்தூள் உற்பத்தியாளர்களுக்கு இடையே 'ராம்நாட் முண்டு' எனும் பரமக்குடி மிளகாய் ரகத்துக்கு நல்ல கிராக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, பரமக்குடி மிளகாய் ரகத்துக்கு உலகத் தரம் மிக்கதான முத்திரையைப் பெற மத்திய அரசு ஏற்பாடு செய்யும். இந்தப் பணிகளை முடுக்கிவிட `ஸ்பைஸ் போர்டுக்கு' உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு அதிகாரிகள் வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்று உரிய சான்றுகளை வழங்குவார்கள். உலகத்தர அங்கீகாரம் முத்திரையைப் பெற இந்திய அரசு அனுப்பும் ஆவணங்களில் இந்தச் சான்றிதழ்களும் இணைக்கப்படும். இதன் வாயிலாக பரமக்குடி மிளகாய் ரகம் எனும் ராம்நாட் முண்டு மிளகாய்க்கு `ஜி.ஐ ரெஜிஸ்ட்ரி' என்ற சிறப்பு முத்திரை பெற மத்திய அரசு களமிறங்கியிருக்கிறது. தமிழகத்தில் மூன்று நகரங்களில் ஸ்பைஸ் போர்டு அலுவலர்கள் உள்ளன. ராமநாதபுரம் தொகுதியானது போடிநாயக்கனூரில் உள்ள ஸ்பைஸ் போர்ட் அலுவலகத்தின் நிர்வாக எல்லைக்குள் உள்ளது. எனவே, இந்த அலுவலகமே உரிய பணிகளை மேற்கொள்ளும். மிளகாய் வேளாண் விவசாயிகளுக்கு கடந்த இரு ஆண்டுகளில் 23 பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மிளகாய் வேளாண் வயல் வரப்புகளை விரிவுபடுத்துவதற்கான உதவிகளும் செய்யப்படுகின்றன. உபகரணங்கள், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு போன்ற நிர்வாகப் பணிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்படுகின்றன. மேற்கொண்டு இன்னொரு ஸ்பைஸ் போர்ட் அலுவலகத்தை தமிழகத்தில் நிறுவும் யோசனை மத்திய அரசிடம் இல்லை. எனினும் ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி கோரிக்கைகள் கவனமாக பரிசீலிக்கப்பட்டு உரிய நலத்திட்டங்கள் வழங்கிட அரசு அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளோம்' என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இத்தகவலை ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி தெரிவித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்