தமிழகம் முழுவதும் 154 மையங்களில் நேற்று தொடங்கியது. நீட் தேர்வை போல கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.

தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், பொருளாதாரம், வணிகவியல், கணிதம், உடற்கல்வி உள்பட 17 பாடப்பிரிவுகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை-1 ஆகிய 2,144 பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, இந்த பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 80 பெண்களும், 63 ஆயிரத்து 375 ஆண்களும், 8 திருநங்கைகளும் என ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 463 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. இந்த இடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. 3 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த தேர்வு நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. தமிழகம் முழுவதும் 154 மையங்களில் ஆன்லைன் மூலம் இந்த தேர்வு நடைபெற்றது. அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் தேர்வு நடக்கிறது. தேர்வு அறைக்குள் வரும் தேர்வர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஏற்கனவே விதிக்கப்பட்டு இருந்தன. அதன்படி, உடை மற்றும் செருப்பு தவிர மற்றவற்றை அணிந்து செல்லவோ, வேறு பொருட்களை கொண்டு செல்லவோ அனுமதிக்கவில்லை. மேலும் பெண்கள் ஆபரணங்கள் அணிந்து உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதை அவர்கள் வெளியே கழற்றி வைக்க அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, அவர்களும் தங்களுடைய ஆபரணங்களை தேர்வு அறைக்கு முன்பு கழற்றி பைக்குள் வைத்தனர். நீட் தேர்வுக்கு எப்படி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தனவோ? அதேபோன்ற கட்டுப்பாடுகள் இந்த தேர்விலும் பின்பற்றப்பட்டன. தேர்வு அறைக்குள் செல்வதற்கு முன்பாக தேர்வர்கள் தங்களுடைய பெருவிரல் கைரேகையை பதிவு செய்தனர். பின்னர், தேர்வர்களுடைய புகைப்படமும் சரிபார்க்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தான் அவர்கள் தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நேற்று காலை இயற்பியல், வரலாறு பாடப்பிரிவுகளுக்கான தேர்வும், பிற்பகலில் விலங்கியல், பொருளாதாரம், தாவரவியல், அரசியல் அறிவியல், உடற்கல்வி, புவியியல், மனை அறிவியல், இந்திய கலாசாரம் ஆகிய 8 பாடப்பிரிவுகளுக்கான தேர்வும் நடைபெற்றது. மொத்தம் 150 வினாக்கள் என ஒவ்வொரு வினாவுக்கு தலா ஒரு மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு நடந்தது. இதில் இயற்பியல் தேர்வு ஓரளவு எளிதாக இருந்ததாகவும், 10 வினாக்கள் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் கூறினர். இன்றும்(சனிக் கிழமை) தேர்வு நடைபெறுகிறது. காலையில் ஆங்கிலமும், பிற்பகலில் நுண்ணுயிரியல், உயிரிவேதியியல், வணிகவியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக் கான தேர்வு நடக்க உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்