துப்புரவு தொழிலாளர்கள் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்: திருவொற்றியூர் மண்டலத்தில் அவலம்

திருவொற்றியூர் மண்டலத்தில் மாநகராட்சியின் பேட்டரி வாகனங்களில் துப்புரவு பணியாளர்களை ஆபத்தான முறையில் ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து தினசரி சேகரமாகும் குப்பை கழிவுகள், துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு, மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பை உரம் தயாரிக்க அங்குள்ள உரக்குடிலுக்கும், மக்காத குப்பை கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கும் கொண்டு செல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை எடுத்துச் செல்ல மூன்று சக்கர சைக்கிள்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த மூன்று சக்கர சைக்கிளை காலால் மிதித்து ஓட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து குப்பைகளை சேகரித்து எடுத்து செல்ல புதிய பேட்டரியில் இயங்கும் சிறிய வகை மோட்டார் வாகனங்களை மாநகராட்சி நிர்வாகம் வழங்கியது. இதன்படி திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இந்த பேட்டரி வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குப்பைகளை தரம் பிரித்து பெறுவதற்கு தொட்டிகளை மட்டுமே எடுத்துச் செல்லவேண்டிய இந்த வாகனங்களில், அதிக அளவிலான துப்புரவு பெண் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு வார்டுகளுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வாறு ஆபத்தான முறையில் செல்லும்போது, குண்டும் குழியுமாக உள்ள சாலையில் வாகனம் கவிழ்ந்து துப்புரவு பணியாளர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதுடன், பேட்டரி வாகனமும் பழுதாகும் நிலை உள்ளது. எனவே குப்பை அகற்றுவதற்கு வழங்கிய பேட்டரி வாகனங்களில் துப்புரவு பணியாளர்களை அழைத்து செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். பணி முடிந்தபின் பேட்டரி வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்