இழப்பீடு வழங்குவதில் பாரபட்சம்: சாலை பணியை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டம்

திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நெடுஞ்சாலை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தின் வழியே செல்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கீழப்பழுவூர் கிராம மக்களிடம் சாலையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு சதுர மீட்டருக்கு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து அனைவரிடமும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில் நிலத்தை ஒப்படைத்தவர்களில் பலருக்கு அடுத்த சில மாதங்களில் அதற்கான இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு சான்றிதழ் குறைபாடு காரணமாக பணம் வழங்குவது தாமதப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீதமுள்ளவர்களும் சான்றிதழ்களை ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களுக்கும் தற்போது இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்பு நிலத்தை ஒப்படைத்தவர்களிடம் கொடுத்த பணத்தைவிட தற்போது நிலத்தை ஒப்படைத்தவர்களுக்கு ஒரு சதுர மீட்டருக்கு அதிகப்படியான பணம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முன்பு நிலத்தை ஒப்படைத்தவர்கள் எங்களுக்கும் அதே தொகை தானே நீங்கள் வழங்க வேண்டும். தற்போது சான்றிதழ்களை வழங்கியவர்களுக்கு மட்டும் ஒரு சதுர மீட்டருக்கு ஏன் அதிகப்படியான இழப்பீட்டு தொகையை வழங்கி உள்ளர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட தொடங்கினர். இதனையடுத்து அதிகாரிகள் கூடிய விரைவில் இதை சரி செய்து தருகிறோம். அதுவரை நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தொடங்காது என கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் பல மாதங்கள் கடந்தும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் பல்வேறு மனுக்களை தொடர்ந்து அளித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கீழப்பழுவூர் கிராமத்தில் 3 இடங்களில் தொடங்கப்பட்டது. பிரச்சினைக்கு தீர்வு வழங்காமலேயே வேலையை தொடங்கியதால், ஆத்திரமடைந்த அந்த பாதிக்கப்பட்ட மக்கள் வேலை நடைபெற்றுக்கொண்டிருந்த 3 இடங்களுக்கும் சென்று வேலை நடை பெறுவதை தடுத்து நிறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டங்களுக்கு பின்பும் எந்த அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வராததால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கு தடுப்புக்காக வைக்கப்பட்டிருந்த தகரங்களை கழட்டி வீசி, பள்ளம் தோண்டுவதற்கான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லைன் எந்திரத்தின் மீது ஏறி நின்று இதற்கு தீர்வு கிடைக்கும் வரை வேலைகளை தொடங்கக்கூடாது என கூறிவிட்டுகிராமமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்