உலக உணவு தினத்தையொட்டி செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி: திண்டுக்கல்லில் திரண்டு வந்து வாங்கிய மக்கள்

திண்டுக்கல்: உணவு மற்றும் ஊட்டச்சத்து அத்தியாவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக். 16ம் தேதி உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பழங்கால பொருட்களை சேகரித்து, பாதுகாக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள முஜீப் பிரியாணி கடையில் உணவு தினமான நேற்று அதிரடி சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டது. அதாவது, பழைய ஐந்து பைசாவை கொண்டு வரும் முதல் 100 நபர்களுக்கு, ₹90 மதிப்புள்ள அரை பிளேட் சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என அதன் உரிமையாளர் முஜிபுர் ரகுமான் சமூக வலைத்தளங்களில் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். பகல் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படும் என தெரிவித்த போதிலும், நேற்று காலை முதலே பழைய ஐந்து பைசாவுடன் கடை முன்பு பொதுமக்கள் குவிய துவங்கினர்.ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பிரியாணி வாங்க வந்திருந்தனர். பின்னர் பகல் 12 மணிக்கு மேல் அனைவரிடமும், 5 பைசா நாணயத்தை வாங்கிக் கொண்டு பிரியாணி வழங்கப்பட்டது. முதலில் 100 பேருக்கு அறிவிக்கப்பட்ட பிரியாணி, பின்னர் கூட்டத்தை கண்டதும் கூடுதலாக 50 பேருக்கு வழங்கப்பட்டது. அனைவருக்கும் டோக்கன் சிஸ்டம் மூலம் ஒரு துணிப்பையில் பிரியாணி, தால்சா, தயிர் வெங்காயம் வைத்து வழங்கப்பட்டது. இதுகுறித்து கடை உரிமையாளர் முஜிபுர் ரகுமான் கூறுகையில், ''நாம் பயன்படுத்திய நாணயங்கள் உள்ளிட்ட பழைய பொருட்களை சேகரித்து வருங்கால சந்ததிகளுக்கு தெரிவிக்கும் வகையிலும், உணவின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குமே பிரியாணி வழங்கினேன். இதுபோல் பழைய பொருட்களை மீட்க தொடர்ந்து முயற்சிகளை எடுப்பேன்'' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்