வலிமையான ஆணையர்.. தேர்தலில் புரட்சி செய்த நாயகன்.. போய் வாருங்கள் டி.என்.சேஷன்!

டெல்லி: இந்தியாவில் தேர்தலில் பெரிய புரட்சியை செய்தவர் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். தேர்தல் ஆணையர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டி.என்.சேஷன் சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இந்தியாவில் இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் பெயர்தான் நினைவு கூறப்படும். தேர்தல் ஆணையம் வெறும் வாக்கு எண்ணும் அமைப்பு என்று எல்லோரும் நினைத்த போது, அது எவ்வளவு சக்தி வாய்ந்த ஆணையம் என்பதை இவர்தான் நிரூபித்தார். தேர்தலில் பல்வேறு புதிய விதிகளை கொண்டு வந்தார். வடஇந்தியாவில் தேர்தல் நேரத்தில் தொடர் கலவரங்கள் வந்ததை இவர்தான் கட்டுப்படுத்தினார். ஒரே உத்தரவில் மாநில சட்டசபை தேர்தல்களை இவர் ஒத்திவைத்தும் இருக்கிறார். டிசம்பர் 1990-ல் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் டி.என்.சேஷன். இவர் மொத்தம் 6 ஆண்டுகள் அந்த பதவியில் இருந்தார். அதற்கு முன் பல்வேறு ஆட்சியர், துணை ஆட்சியர் பொறுப்புகளை இவர் வகித்து இருக்கிறார். தேர்தல் ஆணையர் பதவி இல்லாமல், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறைஇயக்குநர் ஆகிய பதவிகளில் இவர் வகித்து இருக்கிறார். ராஜீவ் காந்தி ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புத் துறை செயலராக இருந்தார். ஆனால் அப்போதுதான் போபர்ஸ் பீரங்கி ஊழல் புகார் வெளியானது. இதனால் அதற்கு அடுத்த வந்த விபி சிங் ஆட்சியில் இவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அப்போதில் இருந்தே இவர் இந்தியா முழுக்க முக்கியமான அதிகாரியாக அறியப்பட்டார். தமிழகத்தில் திமுக மீது இவர் மிகவும் கடுமை காட்டினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையான விதிமுறைகளை இவர் கொண்டு வந்தார் என்று விமர்சனங்கள் இருக்கிறது. முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் காலமானார் தேர்தலில் சேஷன் செய்த புரட்சிகள்: டி.என்,சேஷன் தேர்தல் அதிகாரியாக இருந்த காலக்கட்டத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. இவர் தேர்தல் ஆணையராக இருந்த போது மிகவும் கண்டிப்பான நபர் என்று பெயர் பெற்றார். தேர்தல் நடத்தை விதிமுறைகளைக் பின்பற்ற வேண்டும் என்ற வழக்கத்தை இவர்தான் கொண்டு வந்தார். 2 லட்சம் அரசுப் பணியாளர்கள் வாக்குச் சாவடிகளில் பணிக்கு அமர்த்தி இவர் புதிய சாதனை செய்தார். இவர் ஆணையராக இருந்த போதுதான் தேர்தல் நாளில் நடைபெறும் கொலைக்குற்றங்கள் 36 என்பதிலிருந்து 3 ஆகக் குறைந்தன. வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகள் பற்றிய விவரங்களைத் தேர்தல் ஆணையத்துக்கு கொண்டு வந்தவரும் இவர்தான். அதற்கு முன் தேர்தலில் பல கோடிகள் முறையின்றி செலவு செய்யப்பட்டது. வாக்காளர்களை அரசியல் கட்சிகளே வாக்குச் சாவடிக்கு அழைத்துவருவதை இவர்தான் தடுத்து நிறுத்தினார். வாக்குசாவடி முகவர்களுக்கான விதிகளை இவர்தான் கொண்டு வந்தார். இவர் தேர்தல் ஆணையராக இருந்த போதுதான் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டது. தலித் சமூகத்தவர்கள், ஆதிவாசிகள் தேர்தலில் வாக்களிப்பதை இவர் ஊக்குவித்தார். தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடி அருகே பாதுகாப்புக்காகக் கூடுதல் பாதுகாப்புப் படைகளை இறக்கும் வழக்கத்தை இவர்தான் கொண்டு வந்தார். தேர்தல் கண்காணிப்பு பணிகளை செய்ய 1,500 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து புதிய புரட்சி செய்தார். தேர்தலில் வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படும் முறையை இவர்தான் கட்டுப்படுத்தினார். தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தை இவர்தான் நிலைநாட்டினார். இவர்தான் தேர்தல் ஆணையத்தில் கூடுதலாக இரண்டு ஆணையர்களை நியமிக்கும் வழக்கத்தை கொண்டு வந்தார். அப்போது இந்த நியமனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவிற்கு ஆதரவாக செயல்படுகிறார், திமுக, கம்யூனிஸ்ட், விபி சிங்கின் ஜனதா தளம் போன்ற கட்சிகளுக்கு எதிராக செயல்படுகிறார் என்று இவர் மீது புகார்களும் கூட வைக்கப்பட்டது. இத்தனை புரட்சிகளை செய்த இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் காலமானார். திருநெல்லை நாராயண அய்யர் சேஷன் அல்லது டி. என். சேஷன் என்று நாடு முழுக்க இவர் அறியப்பட்டார். இவருக்கு வயது 87 என்பது குறிப்பிடத்தக்கது. வயோதிகம் காரணமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தவர் இரவு 11 மணிக்கு காலமானார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்