தங்கம் கடத்திய இரண்டு பெண்களை, சென்னையில் சினிமா பாணியில் ரவுடிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சி ரேகைகளை படரவிட்டுள்ளது

அதிகாலை இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பாத்திமா, தெரசா என்ற இரண்டு பெண்கள் வந்துள்ளனர். `டிப் டாப்' உடையில் வந்தவர்களை வழக்கமான சோதனைக்கு உட்படுத்திய சுங்க இலாகா அதிகாரிகள், அவர்களது வருகையின் நோக்கம் குறித்து விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் கிடைத்துள்ளது. சந்தேகமடைந்த அதிகாரிகள், பாத்திமா, தெரசாவை தனியறையில் சோதித்தபோது அவர்களின் உடைமையில் சந்தேகிக்கும்படியான எந்தப் பொருளும் இல்லை. ஆனால், இருவரது வயிறும் ஊதி இருந்தது. தங்கம், போதைப் பொருள்களை கடத்துபவர்கள் சிறிய டியூப் மாத்திரைகளில் பொருளை அடைத்து, அதை விழுங்கிவிடுவார்கள். பின்னர் பொருளைச் சேர்க்க வேண்டிய இடத்துக்கு வந்தவுடன், `இனிமா' கொடுத்து கழிவுகள் வழியாக மாத்திரைகளை வெளியே எடுப்பார்கள். சுங்க இலாகாவினரின் கெடுபிடியிலிருந்து தப்பிப்பதற்காக இதுபோன்ற நூதன முறையை கடத்தல் கும்பல்கள் கையாளுகின்றன. பாத்திமா, தெரசா இருவரும் இப்படி எதையாவது விழுங்கி வைத்திருக்கிறார்களோ என சந்தேகமடைந்த சுங்க இலாகா உயரதிகாரிகள், கடத்தல் பெண்கள் இருவருக்கும் இனிமா கொடுத்து பொருளை வெளியே எடுப்பதற்காக, பல்லாவரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று காலை 5:30 மணிக்கு அனுப்பியுள்ளனர். இப்பெண்களுக்கு பாதுகாப்பாக அம்புஜி என்கிற பெண் அதிகாரியும், திருப்பதி என்கிற ஆண் அதிகாரியும் உடன் சென்றுள்ளனர். அங்கு யாரும் எதிர்பாராத திருப்பம் நடந்துள்ளது. கடத்தல் பெண்களுடன் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்திறங்கியபோது, இரண்டு கார்களில் காத்திருந்த ரவுடி கும்பல், அதிகாரிகளைத் தாக்கிவிட்டு பெண்களை மட்டும் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக பல்லாவரம் போலீஸில் சுங்கத்துறையினர் புகாரளித்துள்ளனர். இதனிடையே, நேற்றிரவு கடத்தல் பெண்கள் இருவரையும் விமானநிலையத்தில் வந்து இறக்கிவிட்ட ரவுடிகள், மின்னல் வேகத்தில் பறந்துவிட்டனர். தங்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை சுங்க அலுவலகத்தில் மாட்டியிருப்பதால், திக்குத் தெரியாமல் முழித்த பெண்கள் இருவரும், மீண்டும் சுங்க அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர். `நீங்க இங்கதான் இருக்கீங்களா?' என அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், அப்பெண்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் காட்சிகள் விரிந்துள்ளன மருத்துவமனையிருந்து இப்பெண்கள் இருவரையும் கடத்திச் சென்ற ரவுடிகள் கும்பல், தனி பங்களாவில் வைத்து அவர்களுக்கு இனிமா கொடுத்து, வயிற்றில் டியூப் மாத்திரை மூலமாக கடத்தி வந்த மொத்தத் தங்கத்தையும் எடுத்துக்கொண்டதாம். பின்னர், அவர்களை விமானநிலையத்தில் வந்து இறக்கிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். இத்தகவலை சுங்க அதிகாரிகளிடம் கடத்தலில் ஈடுபட்ட பெண்கள் கூற, விவகாரம் சென்னை மாநகரக் காவல்துறையிடம் வந்துள்ளது. அப்பெண்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், பல்லாவரம் காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். வழக்கமாக, கடத்தல்காரர்களுக்கு இனிமா கொடுத்து பொருளை மீட்க வேண்டுமென்றால், விமானநிலைய காவல்நிலையத்தின் அதிகாரிகள் பாதுகாப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்தான் `அட்மிட்' செய்ய வேண்டும். கடத்தல் பெண்களை சுங்க அதிகாரிகள் ஏன் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும், சம்பவம் நடைபெற்ற தனியார் மருத்துவமனையிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தபோது, அதிகாரிகள் யாரும் தாக்கப்படவில்லை என்பதும், பெண்கள் இருவரும் எந்தச் சலனமும் இல்லாமல் ரவுடிகளின் கார்களில் ஏறிப் பயணிப்பதும் பதிவாகியுள்ளது. சுங்க அதிகாரிகள் பொய் சொன்னார்களா என்கிற கோணத்திலும் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். `அயன்' பட பாணியில் தங்கம் கடத்தி போலீஸ் விசாரணையிலுள்ள பாத்திமா, தெரசா இருவரும் வாய் திறந்தால் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்