இருமல், சளி, காய்ச்சல், சாதாரண வாந்தி, பேதி, லேசாக அடிபட்ட காயம் போன்றவற்றிற்கு, ஆன்டி பயாடிக் பயன்படுத்த தேவையில்லை

கடந்த, 1940களில் இருந்தே, ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. அப்போது இருந்ததைக் காட்டிலும், அதிக அளவில் இந்த மருந்துகள், தற்போது நம்மிடம் உள்ளன. இதில் கவனிக்க வேண்டியது, மருந்துகள் அதிகமாக அதிகமாக, கிருமிகளின் வலிமை, புத்திசாலித்தனம் அதிகரித்து கொண்டே போகிறது என்பது தான். பென்சிலின் கண்டுபிடித்த அலெக்சாண்டர் பிளமிங், நோபல் பரிசு பெற்ற விழாவில் பேசும் போது, பென்சிலின் உட்பட, ஆன்டி பயாடிக் மருந்துகளை முறையாக கையாளவில்லை என்றால், பாக்டீரியா கிருமிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்று விடும் அபாயம் உள்ளது என்று சொன்னார். அது தான் தற்போது நடந்திருக்கிறது. இதற்கு என்ன தீர்வு? கிருமிகள் வலிமை பெற்று விட்டால், அதற்கு தீர்வே கிடையாது. ஆன்டிபயாடிக் மருந்துகள் இருந்தாலும், அதனால் உபயோகம் இல்லாமல் போய்விடும். புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு பரிசோதனை செய்து, அவற்றை உறுதி செய்யாமல், எந்த மருத்துவரும் மருந்து கொடுப்பதில்லை. ஆனால், ஆன்டி பயாடிக் மருந்துகளை எழுதுவதற்கு, எல்லா டாக்டர்களும் தயாராகவே உள்ளனர். ஆன்டிபயாடிக் நல்லது தான் தவறில்லை என்ற தவறான அபிப்ராயம் பொதுமக்களிடமும் உள்ளது. குழந்தைக்கு காய்ச்சல், சளி வரும் நேரங்களில் எல்லாம், ஆன்டிபயாடிக் தர வேண்டும் என்று தவிக்கின்றனர்; இது நல்லதல்ல. என் குழந்தைக்கு ஏழு வயதாகிறது. இது வரையிலும், ஒரு முறை தான் ஆன்டிபயாடிக் மருந்து தந்துள்ளேன். 75 சதவீதம் குழந்தைகளுக்கு, ஓராண்டில், நான்கு முறை தரப்படுகிறது. எதுக்காக இதை தருகிறோம் என, தெரிவதில்லை. வைரஸ் தொற்றிற்கு பாக்டீரியா தொற்றிற்கான மருந்து பயன்படுத்தக் கூடாது என்பதே புரிவதில்லை. மருந்து எழுதி தருவதற்கு, எனக்கு ஒரு நிமிடம் போதும்; இந்த மருந்து கெடுதல் என்று புரிய வைப்பதற்கு, 20 நிமிடங்கள் ஆகின்றன.நம் நாட்டில் மட்டுமே இது பிரச்னையா?அப்படி சொல்ல முடியாது.கட்டுப்பாடு இல்லாமல் பயன்படுத்தியதால், பாகிஸ்தான் மக்களுக்கு, டைபாய்டு பாதிப்பு வந்தால், தற்போது உள்ள எந்த மருந்தினாலும் சரிசெய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது .நம் நாட்டிலும், குறிப்பிட்ட சில ஆன்டி பயாடிக் மருந்துகள் மட்டுமே பலன் தருகிறது. இன்னும் சில ஆண்டு களில், எந்த ஆன்டி பயாடிக் மருந்தும் வேலை செய்யாது என்ற நிலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவை எல்லாம் நாமாகவே உருவாக்கி கொண்ட பிரச்னை.சுவீடன், பின்லாந்து, நார்வே நாடுகளில் இதன் பயன்பாடு குறைவு. அதனால் தான், அவர்களின் உடல்நலம் நன்றாக உள்ளது. என்ன பாதிப்புகள் வரும்? அலர்ஜி, வாந்தி, பேதி, சிறுநீரகம், கல்லீரல், நரம்பு மண்டல பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அடிக்கடி பயன்படுத்துவதால், குறிப்பட்ட கிருமி வலிமையாகி விடும்.ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன்பாடு மிக குறைவாக இருந்தால், சாதாரண தொற்று பாதிப்பே ஏற்படும். வீரியம் குறைந்த மருந்துகள் போதும். இதைவிட பெரிய பிரச்னை, கால்நடைகள், கோழிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை நேரடியாகவும், தீவனம், தண்ணீர் வழியாகவும் செலுத்துகின்றனர். இவற்றை சாப்பிடும் நமக்கும் பாதிப்பு வரும். என்ன செய்யலாம்? பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல், சாதாரண வாந்தி, பேதி, லேசாக அடிபட்ட காயம் போன்றவற்றிற்கு, ஆன்டி பயாடிக் பயன்படுத்த தேவையில்லை என்ற விழிப்புணர்வை, தாய்லாந்து மக்களிடம் ஏற்படுத்தி, அந்த நாட்டில் இதன் பயன்பாட்டில், 45 ஆயிரம் டன் மருந்தை குறைத்து உள்ளனர். இதை நம்மாலும் செய்ய முடியும். டாக்டர்கள், மருத்துவமனைகள், தனி நபர்கள் அரசுடன் இணைந்து, ஆன்டிபயாடிக் பயன்பாட்டை குறைக்க முன்வர வேண்டும். பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், எதுவும் செய்ய முடியாது. -டாக்டர் சுப்ரமணியம் சுவாமிநாதன், தொற்று நோய் மருத்துவ ஆலோசகர், சென்னை மற்றும் பெங்களூரூ


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்