காஷ்மீர் மற்றும் சி.ஏ.ஏ நடவடிக்கைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) தொடர்பான சர்ச்சைகள் தற்போது வரை ஓய்ந்ததாக இல்லை. சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டங்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சி.ஏ.ஏ-வை எதிர்த்து தொடரப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. கேரளாவைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மாநில சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் வருகின்றன.


சி.ஏ.ஏ-வுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் சர்வதேச அளவிலும் சி.ஏ.ஏ - என்.ஆர்.சி - என்.பி.ஆருக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சி.ஏ.ஏ நிறைவேற்றப்படபோதே இந்தச் சட்டம் பாகுபாட்டுடனும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகவும் இருப்பதாக ஐ.நா கருத்து தெரிவித்திருந்தது. சி.ஏ.ஏ-வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஐ.நா கோரியிருந்தது.


தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்திலும் சி.ஏ.ஏ மற்றும் காஷ்மீர் தொடர்பாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. 751 உறுப்பினர்கள் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 626 உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துகிற ஆறு பிரதான கட்சிகள் தனித்தனியாக இந்தத் தீர்மானங்களைத் தாக்கல் செய்கின்றன. வருகிற ஜனவரி 29-ம் தேதி இந்தத் தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றன. ஜனவரி 30-ம் தேதி இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.


இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பல சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும் எதிராக உள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்.ஆர்.சி நிறைவேற்றப்பட்டால் அது மிகப்பெரிய நாடற்ற நெருக்கடியை (statelessness crisis) உருவாக்கும் என்றும் அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதற்கு இந்தியா கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளது. இந்திய அரசு அளித்துள்ள பதிலில், “குடியுரிமைச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நாடாளுமன்றத்தில் முறையான ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றியே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற நாடுகளின் நாடாளுமன்றங்களைக் கேள்வி கேட்பதை ஐரோப்பிய ஒன்றியம் தவிர்க்க வேண்டும். இந்தியா தொடர்பாக எந்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யும் முன்பும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசுடன் முறையாகக் கலந்தாலோசிக்க வேண்டும்” என்றுள்ளது.


ஐரோப்பிய ஒன்றியத்தில் கொண்டு வரப்பட உள்ள தீர்மானங்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தொடரும் கட்டுப்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. இணையத் தடை முழுவதுமாக நீக்கப்பட வேண்டும் என்றும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.


மேலும் அதில், பா.ஜ.க அரசு இரண்டாவது முறை வெற்றி பெற்றதில் இருந்தே எதிர்கருத்துகளை முடக்கி, மனித உரிமை அமைப்புகள், செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து குறிவைத்து வருகிறது. குடியுரிமைச் சட்டத்தில் முஸ்லிம்கள் விலக்கப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்கள், ரோஹிங்யா, அஹமதியா முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை. மதம் அடிப்படையாகச் சேர்க்கப்பட்டுள்ளது.”


"இந்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு மட்டுமல்லாது, சர்வதேச மனித உரிமை பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கும் எதிராக உள்ளது. பல மாநில அரசுகளும் சி.ஏ.ஏ-வை செயல்படுத்த மாட்டோம் என அறிவித்து வருகின்றன. கேரளாவைத் தொடர்ந்து பல மாநில அரசுகளும் சி.ஏ.ஏவுக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன.


இதை எதிர்த்து நடைபெற்று வருகிற போராட்டங்களை இந்தியா ஒடுக்குமுறை கொண்டு கையாள்கிறது. பல இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரழந்துள்ளனர், 175 பேர் காயமடைந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கடும் சித்ரவதைகளையும் சந்தித்துள்ளனர்.


காவல்துறை உள்ளிட்ட இந்திய பாதுகாப்புப் படைகள் விதிமுறைகளுக்குட்பட்டு போராட்டங்களைக் கையாள வேண்டும். இந்திய உச்ச நீதிமன்றம், இந்த வழக்குகளை முறையாக விசாரித்து வழங்குகிற தீர்ப்பு, இதில் ஒரு தெளிவைத் தரும் என்று நம்புகிறோம்” என்றுள்ளது.


கடந்த அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்திய அரசு காஷ்மீர் அழைத்துச் சென்றுள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களே காஷ்மீர் செல்ல இந்திய அரசு அனுமதி மறுத்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அயல்நாட்டுப் பிரதிநிதிகளை மட்டும் அழைத்துச் சென்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சர்வதேச விமர்சனங்களுக்காக இந்திய அரசு நிறைவேற்றுகிற நாடகம் இதுவென்றும் குற்றம்சாட்டப்பட்டது. இந்திய அரசு அழைத்துச் சென்ற உறுப்பினர்கள் அனைவருமே வலதுசாரி கருத்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


23 ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட பயணத்தை விமர்சித்துள்ள புதிய தீர்மானங்கள், "அங்கு நடைபெறுகிற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உறுப்பினர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை " என்றுள்ளது.


வருகின்ற மார்ச் மாதம் இந்திய - ஐரோப்பிய மாநாடு பிரஸ்சல்ஸில் நடைபெற இருக்கிறது. அதில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது சி.ஏ.ஏ தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்மானங்களின் கோரிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ உள்நாட்டு விவகாரம் என்றாலும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று இதை இந்திய அரசுதான் சர்வதேச விவாதமாக்கியது என்கிற விமர்சனங்கள் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துமே சி.ஏ.ஏ - என்.ஆர்.சி தொடர்பாகக் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளன


சி.ஏ.ஏ - என்.ஆர்.சியை நிறைவேற்றுவதில் மத்திய பா.ஜ.க அரசு பிடிவாதமாக இருந்துவருகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் நட்பு நாடாகப் பார்க்கப்படுகிற வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினாகூட சி.ஏ.ஏ தேவையற்றது என்று கூறியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் அது இந்திய அரசுக்கு மேலும் அழுத்தத்தையே உருவாக்கும். சி.ஏ.ஏ அத்தியாயத்தில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை... இது மற்றுமொரு தொடக்கப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்