5 நாட்களுக்கு 30,120 பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 10-ம் தேதி முதல் 5 நாட்களுக்கு 30,120 சிறப்புப் பேருந்துகள் மற்றும் சென்னையிலிருந்து 18995 சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: “பொங்கல் திருநாளை முன்னிட்டு பயணிகள் எளிதாகப் பயணிக்க பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சிறப்புப் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட உள்ளன. கோவை, திருப்பூர் சேலம், பெங்களூரு, திருச்சியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. சென்னையில் வழக்கம்போல் 5 இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஆந்திர மாநிலம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும். திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தத்தில் இருந்து புறப்படும். வேலூர், ஆரணி, ஆற்காடு, ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, வேளாங்கண்ணி, விழுப்புரம், விருதாச்சலம், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், கோவை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், ஊட்டி, பெங்களூர், எர்ணாகுளம் மற்றும் தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும். 5 பேருந்து நிலையங்களுக்குப் பயணிகள் செல்வதற்கு போதிய அளவில் மாநகரப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் 15 முன்பதிவு சிறப்பு கவுண்ட்டர்கள் திறக்கப்படும். மெப்ஸ், பூந்தமல்லியில் 1 என 17 சிறப்பு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12, 13, 14 மட்டும் சிறப்புப் பேருந்து நிலையங்கள் இயங்கும். 10-ம் தேதி முதல் 5 நாட்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் 5 நாட்களுக்கு 18,995 பேருந்துகள் கூடுதலாகச் சேர்த்து என 30,120 பேருந்துகள் இயக்கப்படும். அதில் சிறப்பு பேருந்துகளாக 18995 பேருந்துகள் 5 நாட்களும் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் அனைத்தும் கோயம்பேட்டிலுள்ள கட்டுப்பாட்டறை மூலம் கண்காணிக்கப்படும். சுங்கச்சாவடிகளில் பேருந்துகள் தடையின்றி பயணிக்க தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வழித்தட மாற்றம் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல் வழியாக இயக்கப்படும். பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்கள் பிற இடங்களில் இருந்து சென்னைக்கு வர ஏதுவாக, பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்ள அல்லது புகார் தெரிவிப்பதற்கு 9445014450 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத் தில் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்க ஏற்பாடு செய்யயப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் எளிதாகப் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும். தீபாவளி நேரத்தில் செய்தது போன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். மாலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை என போக்குவரத்து போலீஸாரிடம் தெரிவித்துள்ளோம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் அளிக்க டோல்ஃப்ரீ எண் கொடுத்துள்ளோம். புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம். அரசிடம் அருமையான ஸ்லீப்பர் வாகனங்கள் உள்ளன. எவ்வளவு நெரிசல் இருந்தாலும் சமாளிக்க பேருந்துகள் எங்களிடம் உண்டு. ஆகவே, அதையும் மீறிப் போவதை நாம் தடுக்க முடியாது. ஆனால், கூடுதல் கட்டணம் என புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம். அதற்கென அதிகாரிகள் உள்ளனர். போன தடவை 6 வாகனங்களில் அதிக கட்டணம் வசூலித்ததை திருப்பி அளிக்க வைத்தோம். தற்போதும் 11 பறக்கும் படைகள் கண்காணிக்க உள்ளன.” இவ்வாறு அமைச்சர் விஜய்பாஸ்கர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்