மினு மினு சருமத்துக்கு ஆசையா..

 வெண்மையான * சருமம் கொண்டவர்களாக இருந்தால் மட்டும் அழகு என்று சொல்ல முடியாது. அந்த சருமம் எவ்விதமான குறைவும் இன்றி, மாசு மருவற்றதாக இருத்தல் அவசியம். ஆனால் சருமம் எல்லாக் காலத்திலும் ஒரே மாதிரியாக இராது. காற்று, வெளிச்சம், குளிர், வெயில் ஆகியவற்றிற்கு ஏற்ப சருமத்தின் நிறமும், தன்மையும் மாறக்கூடியது ஆகும். அதனால சருமத்தைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். 


சருமத்தைப் பாதுகாக்க ஆரோக்கியம், சுத்தம், சத்துள்ள உணவு, போதிய உடற்பயிற்சி போன்றவையே அடிப்படை ஆகும். சருமத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள் முதலில் அவர்களது சருமம் எந்த வகைப்பட்டது என்பதை அறிந்து கொள்வோம். எப்படி இதனை அறிந்துகொள்ள முடியும் என்பதைப் பார்க்கலாம்.



  • உலர்ந்த சருமம்

  • இந்த வகையைச் சேர்ந்தவர்கள் சருமம் எப்போதும் உலர்ந்து காணப்படும். மேலும் கை, கால்கள் சொரசொரப்பாகவும், பாதங்கள்,உதடுகள் ஆகியன வெடிப்புடனும் காணப்படும். குளிர்ப் பிரதேசங்களில் வசிப்பவர்களுக்கும், குளிர் காலங்களில் இவ்வகைச் சருமம் இருக்கும். தோல் அடிக்கடி உரிந்துவிடும். இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் 'மாய்ஸ்ச்ரைசர்' என்னும் திரவத்தைத் தினசரி உபயோகித்து வரவேண்டும்.

  • எண்ணெய்ப் பசையுள்ள சருமம்

  • இந்த வகைச் சருமம் கொண்டவரின் மேல்வாய், நெற்றி ஆகிய பகுதிகள் எப்போதும் எண்ணெய் வழிவது போன்று தோற்றம் தரும். இவர்கள் பவுடர் போட்டுக் கொண்டால், திட்டுத் திட்டாகத் தெரியும். இவர்களது சருமத் துவாரங்கள் திறந்திருப்பதால் எளிதில் முகத்தில் வெண் கருப்புப் புள்ளிகள் தோன்றக்கூடும். இவ்வகைச் சருமம் கொண்டவர்கள் முகத்திற்கு எவ்வித கிரீமும் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. முகத்தை சுத்தம் செய்ய ‘ஆஸ்ட்ரிஜென்ட்' என்னும் திரவத்தை உபயோகிக்க வேண்டும். இவர்கள் கொழுப்புப் பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும். இரவு படுக்கைக்குப் போகுமுன் சோப்பு போட்டு முகத்தைக் கழுவ வேண்டியது அவசியம்.

  • சாதாரண சருமம்

  • இந்த வகை சருமம் கொண்டோரின் இருபுறமும் எண்ணெய் வழிவது போலவும், கன்னப் பகுதிகளின் சருமம் உலர்ந்தது போலவும் இருக்கும். இம்மாதிரி சருமம், சிலருக்கு அலர்ஜி ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் என்பதால் க்ரீம், பவுடர், சோப் போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்திப் பார்த்தே உபயோகிக்க வேண்டும். சருமம் சாதாரணமாக எல்லோருக்குமே முப்பது வயதுவரை இறுக்கமாகவும், ஈரத்தன்மையோடும் இருக்கும். 30 வயதிற்குப்பின் கொஞ்சம் கொஞ்சமாக உயிரணுக்களை இழந்துவிடும். இம்மாதிரிச் சமயத்தில்தான் நமது சருமத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சியும், உடல், முகம் இவற்றிற்கு 'மசாஜ்' செய்யவும் வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். உடல் இளமையாகத் தோற்றமளிக்கும். நம் சருமத்திற்கு ஏற்ற சோப், பவுடர் முதலியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கடலைமாவும், பாசிப்பயறு மாவும் சருமத்திற்கு மிகவும் ஏற்றவை.

  • நீரின்றி அமையாது அழகு!

  • சருமத்தையும், உடல் அழகையும் பாதுகாப்பதில் மிகவும் இன்றியமையாதது தண்ணீ ர். நமது உடலில் அறுபது சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. ஒவ்வொரு அணுவும் உயிர் வாழவும், உடலுறுப்புகளின் இயக்கங்கள் சரிவர நடைபெறவும் நீர் அவசியமாகிறது. உணவுப் பொருட்களை எடுத்துச் செல்வதிலும்ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற வாயுக்களை ஓர் இடத்தில் இருந்து மற்ற இடத்திற்குக் கொண்டு செல்வதிலும், உடலில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதிலும் நீரின் பங்கு இன்றியமையாதது.


அழகின் ஆதாரமான தசைகளின் அழகு, இளமை அனைத்திற்கும் நீர் அவசியம். 'நீரின்றி அமையாது உலகம்' எனின் நீரின்றி அமையாது ஆரோக்கியமான அழகு. ஜீரண உறுப்புகள் சரிவர இயங்க, சுத்திகரிக்கப்பட்ட நீர் அவசியம். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படின் தோலில் சுருக்கங்கள், பருக்கள், இளமையில் முதுமை என நாம் விரும்பத்தகாத சரும நோய்கள் பலவும் நம்மைத் தொடர்ந்து வருகின்றன. எனவே, தினமும் குறைந்தது எட்டு முதல் பத்து டம்ளர்கள் நீர் அருந்துவது மிகவும் அவசியமாகிறது.


அழகை ஆராதிப்பவர்கள் அனைவரும் மேற்கொள்ள வேண்டிய எளிய இனிய வழி. எனவேதான் அழகுக்குறிப்புகளின் தலையாய அருமருந்தாக முதலில் நீரைச் சொல்கிறோம். பெரும்பாலும் தண்ணீர் ஏதோ தாகத்தைத் தீர்க்கக்கூடியது என்பது மட்டும்தான் நாம் அறிந்தது. ஆனால், இந்தப் பெரிய பானத்தில் ‘மருத்துவக் குணங்கள்' அதிகம் என்பது நம்மில் பலர் அறியாதது.


உடலிலுள்ள வேண்டாத கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, மாரடைப்பு, எலும்புருக்கி நோய் மற்றும் ஜீரண கோளாறுகள் அனைத்தையும் எளிதாக நிவர்த்தி செய்யக்கூடியது நீர். உடலுக்கு சக்தியையும், தசைகளுக்கு வலுவையும், பொலிவையும் தருவது நீர்தான். மனச்சோர்வு, உடற்சோர்வு, மயக்கம் எனில்குளிர்ந்த நீரை முகத்திலடித்தல், கழுவுதல் போன்றவற்றால் புத்துணர்ச்சி கிடைக்கப் பெறுகிறோம் அல்லவா?


நாம் அன்றாடம் சுவாசிக்கவும், உ ட லி லுள்ள கழிவுகள் வியர்வையாகவும் சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு கோப்பை நீர் வெளியேற்றப்படுகிறது.


கடுமையான கோடைக்காலத்தில் நீர் அருந்துவதும், குளிப்பதும் ஆனந்தம். உடலுக்கு நீர்த் தேவை அதிகமாகிறது. அதிகப்படியான நீர் அருந்துபவர்கள் இளமையைத் தக்க வைத்துக் கொள்கிறார்கள். மேலும் சீதோஷ்ண சமநிலையை சருமம் தக்கவைத்துக் கொள்வது நம் அன்றாடக் குளியலால்தான்.


தினமும் அதிக பழங்கள், பழச்சாறு அருந்துபவர்களுக்கு உபரியாக நீர்ச்சத்து கிடைக்கும். ஆனால் மசாலா வகைகளை உண்பவர்களுக்கு மேலும் அதிக நீர் தேவைப்படுமல்லவா?


காலை எழுந்ததும் ஒன்று முதல் மூன்று டம்ளர்கள் வெதுவெதுப்பான அல்லது குளிர்ச்சியான நீர் அருந்துதல் நலம் பயக்கும். தவிர இரண்டு மணி நேரத்திற்கொரு முறை ஒரு டம்ளர் நீர் அருந்துதல் வேண்டும்.


நீர்ச்சத்து குறைவு எனில் சருமத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது. நமது உடலைப் போர்த்தியிருக்கும் தோல், ஈரப்பதத்துடன் வனப்பாகவும், இளமையாகவும் இருப்பதற்கு நீர்ச்சத்து உகந்ததாகிறது.


சருமத்தினை மேம்படுத்துவதற்காக அழகுக் குறிப்புகள் இதோ...


கீரை வகைகளுள் ஏதாவது ஒன்றைத் தினசரி சாப்பிடுவது சருமத்திற்கு நல்லது. இதுதவிர கேரட், கோஸ், முள்ளங்கி, வெள்ளரிக்காய், தக்காளி போன்றவற்றை சாலட் போன்று சாப்பிட வேண்டும்.


தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். இதுதவிர தினமும் கொதித்து ஆறவைத்த நீர் எட்டு டம்ளர் முதல் பத்து டம்ளர் வரை குடிப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.


முகத்திற்கு நாம் சோப்பு போட்டு கழுவுவதால் மட்டுமே, நம் சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் அவ்வளவு எளிதில் வெளியேறி விடுவதில்லை. சுட வைத்து ஆறவைத்த பால் அல்லது 'க்ளன்சிங் மில்க்' என்று கடைகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை ஒரு பஞ்சில் நனைத்து, முகம், கழுத்து முதலிய பாகங்களில் தடவிக் கொள்ள வேண்டும்.


3 அல்லது 5 நிமிடம் கழித்து வேறு ஒரு பஞ்சினால் முகம், கழுத்து ஆகிய பகுதிகளைத் துடைக்க வேண்டும். அவ்வாறு துடைத்தால் அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். வாரம் இருமுறை இவ்வாறு செய்யலாம். வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.


முகத்தில் பரு கொண்டிருப்பவர்கள், முதலில் முகத்திற்கு ஆவி பிடித்து, அதிலிருக்கும் கெட்ட நீரை பஞ்சின் மூலம் வெளியேற்ற வேண்டும். அதன் பின்னர் பஞ்சைக் கொண்டு, ஆஸ்ட்ரிஜெண்ட் நனைத்து முகத்தைச் சுத்தம் செய்யலாம். இத்திரவத்தைப் பருக்களின் மேல் தடவினால் தொற்று ஏற்படாமலும், பருக்கள் பரவாமலும் தடுக்கும்.


குளித்துவிட்டு வந்த பிறகு, உடல் முழுவதும் பாடி லோஷன் உபயோகித்து உடல் முழுவதும் மசாஜ் செய்து கொள்ளலாம். முழங்கை, முழங்கால், பாதம் ஆகிய இவற்றின் சொர சொரப்பை இது நீக்கும். கை, கால் விரல்களுக்கு இதைக் கொண்டு மசாஜ் செய்தால் விரல்கள் சதைப்பிடிப்பாகவும் அழகாகவும் தோன்றும். குளித்து முடித்த பின் உடலை டவலால் துடைத்துவிட்டு, உடல், முகம், கை, கால்களில் மாயிசரைசரை தடவிக் கொண்டால் சருமம் மிக மிக மென்மையாய் காணப்படும். வெடிப்புகளோடு உலர்ந்து காணப்படும் சருமத்திற்கு இது ஓர் அருமருந்து.


ரோஸ் வாட்டரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, தினசரி குளித்து முடித்தவுடன் முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவினால் சருமம் மிகவும் மிருதுவாகவும், புத்துணர்ச்சியோடும் இருக்கும்.


மேக்கப் செய்வதற்கு முன்னும் சாதாரணமாக தினம் பவுடர் பூசி வெளியே செல்லும்போதும், ஸ்கின் டானிக்கை முதலில் முகத்தில் பயன்படுத்திவிட்டு பின்னர் பவுடரையோ வேறு பொருள்களையோ இட்டால் அன்று முழுவதும் முகம் பொலிவுடன் இருக்கும்.


பேஸ்பேக் களிமண் போன்று கெட்டியாகவும், பவுடராகவும் கிடைக்கிறது. 'முல்தானி மட்டி' எனப்படும் பவுடர், முட்டையின் வெண்கரு, கடலை மாவு, பாசிப்பயறு மாவு ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைக் கொண்டு, முகத்திற்கு ஆவி பிடித்து, ஃபேஸ் பாக்கினை உபயோகிக்க வேண்டும். வாரம் ஒரு முறை இதனை பயன்படுத்தலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்