2 ரூபாய்க்கு ஆசைப்பட்டு 15000 ரூபாயை இழந்த சூப்பர் மார்கெட்..!
தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் நெய் பாட்டிலுக்கு 2 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததற்கு ரூ.15002 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் - தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் ஸ்ரீ ரெங்கபாளையம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி சத்தியபாமா 2016ம் ஆண்டு நெய் பாட்டில் ஒன்றை வாங்கி உள்ளார்.
அதன்எம்ஆர்பி ரூ.50 என்ற போதிலும் அதனை 52 ரூபாய்க்கு கொடுத்துள்ளனர். விளக்கம் கேட்டதற்கு அந்த கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் சத்தியபாமாவை தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சத்தியபாமா, ஸ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில் மன உளைச்சலுக்கு ஆளான சத்தியபாமாவிற்கு 10 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவிற்காக 5 ஆயிரம் மற்றும் கூடுதலாக வசூல் செய்த 2 ரூபாய் என மொத்தம் ரூ.15,002 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சண்முகநாதன், சம்பந்தப்பட்ட சூப்பர் மார்க்கெட்டுக்கு உத்தரவிட்டார்.