திருச்சியில் பச்சிளம் குழந்தைகளை விற்பது அதிகரித்து வருவது பொதுமக்களை அதிர்ச்சியில்
திருச்சி மாவட்டம், மணப்பாறை முத்துடையான்பட்டி பகுதியில் பிறந்த குழந்தை பல லட்சத்துக்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் செவிலியர் அந்தோணியம்மாள் என்கிற மேரி கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், அடுத்தடுத்த குழந்தைகள் விற்பனை தொடர்பான தகவல்கள், பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் ஒரு தம்பதி, ஆண் குழந்தையை விலைக்கு வாங்கி வளர்த்து வருவதாக, சில நாள்களுக்கு முன்னர் திருச்சி மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அமைப்புக்கும் திருச்சி மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது. இதேபோல் இன்னொரு குழந்தையும் விற்கப்பட்டது தெரியவரவே அதுகுறித்தும் விசாரணை தீவிரமானது.
போலீஸ் விசாரணையில், இந்தக் குழந்தை எங்களுடையதுதான் என்பதற்கு ஆதாரமாக எந்த ஆவணங்களையும் வளர்ப்பவர்களால் அளிக்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலீஸார் குழந்தைகளை அரசுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து குழந்தைகள் நலப் பாதுகாப்புக் குழு அதிகாரிகள் இரண்டு குழந்தைகளின் உண்மையான பெற்றோர் குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரில் இடைத்தரகர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
இதுதொடர்பாகத் திருச்சி மாவட்டக் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம்.
"திருவெறும்பூர் காமராஜர் தெருவைச் சேர்ந்த கோவிந்தன்- அஸ்வினி தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த மூன்று மாதங்களாக ருத்ரன் என்கிற ஆண் குழந்தையை வளர்த்து வருகின்றனர்.
இதுகுறித்து கிடைத்த தகவல் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். எங்கள் விசாரணையில் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் ஒருவர் மூலம் திருச்சியைச் சேர்ந்த கிருஷ்ணன்-புவனேஸ்வரி எனும் தம்பதியிடம் மூன்று லட்ச ரூபாய்க்கு குழந்தையை கோவிந்தன் தம்பதி வாங்கியது தெரியவந்தது. இதற்கான பத்திரமும் கிடைத்தது.
அதுபோலவே, திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் - ராணி தம்பதியருக்குப் பிறந்த ஆண்குழந்தை, துறையூரை அடுத்த எரக்குடியைச் சேர்ந்த தம்பதிக்கு விற்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் நேரில் விசாரித்ததில், குழந்தையைத் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வைத்து வெறும் 7,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இச்சம்பவங்களில் தொடர்புடைய இடைத்தரகர்கள் தலைமறைவாகிவிட்டனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்" என்றார்கள்.
சமீபகாலமாக திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் விற்பனை அதிகரித்து வருவது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. திருச்சி திருவெறும்பூர் பகுதிகளில் குழந்தைகள் கடத்தல் அதிகமாக நடப்பதாகவும் கடத்தப்பட்ட குழந்தைகளுக்குப் பிச்சை எடுத்தல், திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கடத்தல் கும்பல் பயிற்சி வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாமல், சிக்னல் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுப்பதற்கென்றே, அதிக பணம் கொடுத்து பச்சிளம் குழந்தைகளை சில கும்பல்கள் வாடகைக்கு எடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோன்ற குற்றங்களில் மாவட்டக் காவல்துறை உடனடியாகத் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது திருச்சி மக்களின் கோரிக்கையாக உள்ளது.