லஞ்சம் பெற்றதால் காவல் ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது
அடிதடி வழக்கிலிருந்து பெண்ணை விடுவிக்க 5,000 லஞ்சம் வாங்கிய பார்த்திபனூர் காவல் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார். ஏற்கெனவே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய நிலையில் மேலும் பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையினரிடம் ஆய்வாளர் மீது புகார் அளித்ததன் காரணமாக இந்தக் கைது நடந்தேறியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ளது பார்த்திபனூர். இங்குள்ள காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜராஜன். அடாவடி அதிகாரி' எனப் பெயர்பெற்ற இவர் கூலித் தொழிலாளிகள், சாலையோர வியாபாரிகள், தள்ளுவண்டிக்காரர்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் மாமூல் வாங்குவதையே வழக்கமாகக் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பார்த்திபனூர் இடையத்தூர் மேல குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பூமிநாதனின் மனைவி ஹேமலதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையே கடந்த ஜனவரி 20-ம் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பார்த்திபனூர் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கிலிருந்து ஒரு பெண்ணை விடுவிப்பதற்காக காவல் ஆய்வாளர் ராஜராஜன் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். அந்தப் பெண் ரூ.5,000 லஞ்சமாகக் கொடுத்திருந்த நிலையில், மீதிப் பணத்தையும் கேட்டு நச்சரித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் (தற்போது பயிற்சிக்காக சென்றுள்ளார்) பிரத்யேகமாக மாவட்ட பொதுமக்களுக்கு அளித்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தெரிவித்துள்ளார். போலீஸார் கொடுத்த ஆலோசனையின்படி, பார்த்திபனூர் ஆய்வாளர் ராஜராஜன் மீது ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் தங்கவேலு என்பவர் புகாரளித்தார்.
ஆய்வாளர் ராஜராஜனைக் கையும் களவுமாகப் பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனப் பவுடர் தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ஜனவரி 30-ம் தேதி காலை தங்கவேலுவிடம் கொடுத்து, ராஜராஜனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். ரசாயனப் பவுடர் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ராஜராஜன் பெற்றுக்கொண்டவுடன், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி
உன்னிகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் பீட்டர், சந்திரன் ஆகியோர் காவல் ஆய்வாளர் ராஜராஜனைக் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து, ஆய்வாளர் ராஜராஜனைக் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புதுறையினரால் ராஜராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சமூக ஆர்வலரான செல்வராஜ், பார்த்திபனூர் காவல் நிலையம் முன்பாக சூடமேற்றி தேங்காய் உடைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.