லஞ்சம் பெற்ற வீட்டு வசதி சங்க செயலாளர்... அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்!
பண்ருட்டியில் பத்திரம் திருப்பி வழங்க 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற வீட்டு வசதி சங்க செயலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் 6- ஆவது தெருவில் வட்ட வீட்டுவசதி சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் புலியூர் காட்டுசாகை கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் (51) என்பவர் வீட்டு கடன் தொகையாக ரூபாய் ஒரு லட்சம் பெற்றார்.
இதற்கான கடன் தொகை முழுவதும் செலுத்திய பின் வீட்டு பத்திரத்தை சங்க செயலாளர் பாஸ்கரனிடம் கேட்டுள்ளார். அதற்கு பாஸ்கரன் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக கொடுத்தால் பத்திரம் திருப்பி வழங்குவதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து ராமசந்திரன், கடலூர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் செய்தார். அதையடுத்து கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. ராஜாமெல்வின்சிங் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் திருவேங்கடம், மாலா, சண்முகம், சப்- இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் ஆகியோர் கொண்ட குழுவினர் இன்று (12/02/2020) மாலை சங்க அலுவலகம் அருகில் முகாமிட்டனர்.
ராமச்சந்திரன் ரூ.10 ஆயிரத்தை சங்க செயலாளர் பாஸ்கரனிடம் வழங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாஸ்கரனை கையும் களவுமாக பிடித்து கடலூர் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.