வீடு வாங்கும் தனிநபருக்கு ஏன் இரட்டிப்பு வரி விதிக்கக் கூடாது- அரசுக்கு ஐகோர்ட் கேள்வி!

மத்திய அரசு அறிவித்துள்ள 'அனைவருக்கும் வீடு' திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை தனி நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்கக்கூடாது என கட்டுப்பாடுகள் கொண்டு வருவது குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொதுமக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், 369 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பாணை வெளியிட்டது. இந்த அறிவிப்பாணையை எதிர்த்து நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, நிலம் கையகப்படுத்தும் விதிகளை பின்பற்றி அறிவிப்பு வெளியிடவில்லை எனக்கூறி அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 17 லட்சத்து 70 ஆயிரம் பேர் வீடு இல்லாமல் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இவர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தர நிலம் கையகப்படுத்தும் போது, அதிகாரிகள் உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாததால் அரசின் முயற்சிகள் தோல்வியடைவதாக அதிருப்தி தெரிவித்தனர்.


மேலும், வீடு வாங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டு வந்தால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுவது தடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருப்போரின் வருவாய் ஆதாரங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள் அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த விவகாரம் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் நீதிபதிகள் முன்வைத்தனர். அதில்,


*இந்தியாவில் எத்தனை குடும்பங்களுக்கு சொந்த வீடு உள்ளது;


தமிழகத்தில் எத்தனை பேருக்கு வீடு உள்ளது?


*நாட்டின் மக்கட்தொகைக்கு ஏற்ப எத்தனை பேருக்கு சொந்த வீடு உள்ளது? *மத்திய அரசின் 'அனைவருக்கும் வீடு' திட்டம் எப்போது முழுமையாக நிறைவேற்றப்படும்? * 'அனைவருக்கு வீடு' திட்டத்தில் சமுதாயத்தில் பின்தங்கிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு என சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?


* நாட்டில் எத்தனை பேருக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன?


*தனி நபர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட நிலங்கள் மற்றும் வீடுகளை வாங்க அனுமதிப்பது மற்றவர்கள் நிலம்/வீடு வாங்க முடியாத அளவுக்கு விலை ஏற வழி வகுக்காதா?


* ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருக்கும் தனி நபர்களின் விவரங்கள் அரசிடம் உள்ளதா?


*விவரங்கள் இல்லாவிட்டால் அந்த விவரங்களை பெற மத்திய மாநில அரசுகள் ஏன் ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது?


*'அனைவருக்கும் வீடு' திட்டம் முழுமையாக நிறைவேறும் வரை தனி நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்கக்கூடாது என ஏன் கட்டுப்பாடுகள் கொண்டு வரக் கூடாது?


* தனி நபர் வாங்கும் இரண்டாவது வீட்டிற்கான பத்திரப்பதிவு, வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம் என அனைத்தையும் ஏன் இரண்டு மடங்காக உயர்த்தக்கூடாது? *


ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வாங்க கடன் கொடுக்கக்கூடாது என வங்கிகளுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது?


*வெளிநாடுகளில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் நிலம் வாங்க ஏன் தடை விதிக்க கூடாது?


என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக மார்ச் 6ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்