ஆளுநரின் அறிவுறுத்தலை மீறி புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


`புதுச்சேரியில் 12-ம் தேதி (இன்று) கூடவிருக்கும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்படும்' என்று முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்த பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர், `குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கூடாது' என்று மனு அளித்தனர்.


இதையடுத்து, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு அனுப்பிய கடிதத்தில், `குடியுரிமைச் சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அரசாணையாகவும் வெளியிடப்பட்டுள்ளது.


நாடாளுமன்றத்தில் இச்சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் அது புதுச்சேரிக்கும் பொருந்தும். இந்த விவகாரத்தில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் எவ்வித அடிப்படையிலும் கேள்வி எழுப்ப முடியாது.


புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், குடியுரிமைச் சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதம் செய்வது நாடாளுமன்றத்துக்கு எதிரானது” எனக் கூறியிருந்தார்.
ஆளுநரின் அறிவுறுத்தலை மீறி புதுச்சேரி சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக இன்று நிறைவேற்றப்பட்டது.


அ.தி.மு.க, என்.ஆர். காங்கிரஸ் புறக்கணித்த நிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த நியமன உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.


பா.ஜ.க நியமன எம்.எல்.ஏ-க்கள் மூவரும் சட்டமன்ற வளாகத்துக்கு வெளியே `அரசியலமைப்புச் சட்டத்தை காலால் மிதிக்கும் நாராயணசாமி அரசைக் கண்டிக்கிறோம்' போன்ற வாசகத்தைக் கொண்ட பதாகைகளை ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.


தீர்மானத்தின் மீது பேசிய முதல்வர் நாராயணசாமி, ``இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்புள்ளது. தமிழகத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் 2 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.


புதுச்சேரியிலும் ஒன்றரை லட்சம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டத்தை ஏற்க மாட்டோம். எங்கள் அரசை டிஸ்மிஸ் செய்வது என்றால் செய்து கொள்ளுங்கள் என்று பிரதமரையும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் கேட்டுக்கொள்கிறோம். மக்களுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்றார் ஆவேசமாக.


இதையடுத்து, அரசு கொண்டுவந்த தீர்மானத்தை சபாநாயகர் சிவக்கொழுந்து வாசித்தார். தொடர்ந்து பேசியவர், ``குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு எதிரானது. சட்டத்தை செயல்படுத்தினால் வரலாற்றுப் பிழை ஏற்படும்” எனக் கூறி தீர்மானம் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றப்படுவதாக கூறி நிறைவேற்றினார்.


எதிர்க்கட்சிகளின்றி இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, ``ஆட்சியைக் கலைத்தாலும் கவலையில்லை மக்களுக்காகத்தான் ஆட்சி. சட்டமன்றத்தில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை.


துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று முன்தினம் எனக்கு அனுப்பியது ரகசியக் கடிதம். அதை வெளியிட்டது ஏன்..? ஆளுநர் ரகசியத்தை காக்கத் தவறிவிட்டார். சட்டமன்றத்தில் ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம்.


எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. அவர்கள் பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கிறார்களா?
எதிர்க்கட்சி தங்களது கருத்தை சட்டமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் அவைக்கு வரவில்லை.


பா.ஜ.க-வுக்கு ஜால்ரா போடும் வேலையைத்தான் என்.ஆர். காங்கிரஸ் கட்சி செய்கிறது. இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் பா.ஜ.க-வை மக்கள் எதிர்த்துள்ளனர் என்பதை டெல்லி தேர்தல் காட்டுகிறது.


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே 147 வழக்குகள் உள்ளன. தேவை ஏற்பட்டால் நானே வழக்கு தொடர்வேன்” என்றார் ஆவேசத்துடன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்