மால்கள் முதல் மெடிக்கல் வரை..!' - சென்னை எப்படி இருக்கிறது...
உலகளவில் லட்சக்கணக்கான நபர்களைப் பாதித்துள்ள கொரோனா வைரஸானது இந்தியாவிலும் தொடர்ந்து பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 3 பேர் இறந்துள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே, கொரோனா வைரஸ் தொற்றை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகின்றன.
அவ்வகையில் தமிழக அரசும் தொடர்ந்து முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொள்ள நேற்று நடைபெற்றது. பின்னர், தமிழக அரசானது கல்வி நிலையங்கள், மால்கள், அரங்குகள், பார்கள் உட்பட பொதுமக்கள் கூடும்.
பரவலாகஅறியப்பட்ட இடங்களை வரும் மார்ச் 31-ம் தேதி வரை மூட உத்தரவிட்டது. இந்த நிலையில், `சென்னை எப்படி இருக்கிறது?' என்பதைத் தெரிந்துகொள்ள சில முக்கிய இடங்களுக்கு புகைப்படக்காரருடன் ஸ்பாட் விசிட் செய்தோம்.
சென்னைக்குமிக அருகில் எப்போதும் இருக்கும் சூரியனின் வெயில், சிக்னல்கள், டிராஃபிக், கூட்டமான டீக்கடைகள் என வழக்கமான பரபரப்புடன் சென்னை இயங்கிக்கொண்டிருந்தது. ஸ்பென்ஸர் பிளாசாவின் முன்னர் சிலர் கூட்டமாக நின்று காவலாளிகளுடன் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் சென்றோம்.
`தமிழக அரசு உத்தரவிட்டதன்படி மால்கள் மூடப்பட்டுள்ளன' என்பதைக் காவலாளிகள் பொதுமக்களுக்கு கூறி ஸ்பென்ஸர்க்கு வருகை தந்தவர்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர். மால்களுக்கு உள்ளே இருக்கும் கடையின் உரிமையாளர்கள், வேலை செய்பவர்கள் உட்பட யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
முகமூடிகள் அணிந்தபடி அவர்கள் தங்களது பணிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தனர். மால்களுக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள், ``கொரோனா கடைசில நம்ம நாட்டுலயும் என்ட்ரி ஆயிடுச்சு. கொஞ்சம் பயமாதான் இருக்கு.
எதுக்கும் வீட்டுலயே இருக்குறதுதான் நல்லதுபோல" என்று வேடிக்கையாகக் கூறியபடி நகர்ந்தனர்.
`வெயில் அதிகமாக இருந்தால் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்காது' என்பது உண்மையாக இருந்தால் சென்னை எளிதாகத் தப்பிக்கும் என்று நினைத்தபடி எழும்பூரில் உள்ள ஆல்பர்ட் திரையரங்குக்குச் சென்றோம். ``மக்களின் நலன் கருதி...
தமிழக அரசு உத்தரவிட்டதன்படி இன்று முதல் மார்ச் 31-ம் தேதி வரை காட்சிகள் ரத்து" என்ற அறிவிப்புப்பலகையுடன் ஆல்பர்ட் நம்மை வரவேற்றது.
ஆனால், தன்னுடைய வழக்கத்துக்கு மாறாகத் திரையரங்கம் களையிழந்தபடி இருந்தது. ``கூட்டமா வந்தால் யாருக்கு என்னனு யாருக்குத் தெரியும்.
இதுவும் நல்லதுதான்" என்றபடி சிலர் நம்மைக் கடந்துசென்றனர். அங்கிருந்து வரும் வழியில் கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள், கோயில்கள் மற்றும் மசூதிகள் என அனைத்தும் ஆட்கள் நடமாட்டம் இன்றி அமைதியாகவே இருந்தன.
அங்கிருந்து எக்ஸ்பிரஸ் அவன்யூக்குச் சென்றோம்.எப்போதும் கூட்டம் குறையாமல் இருக்கும் இ.ஏ, பிற மால்களில் இருந்த சிறிய கூட்டங்கள்கூட இல்லாமல் பேரமைதியுடன் வெறிச்சோடியபடி காணப்பட்டது.
``பள்ளிக்கூடம் லீவு... ஆனால், வீட்டுக்குத் தெரியாமல் வந்துட்டோம்ண்ணா!" என்று சிரித்தபடி சில மாணவர்கள் வந்த கடமைக்காக எக்ஸ்பிரஸ் அவன்யூ முன் நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினர்.
புகைப்படங்கள் எடுப்பதைக் கவனித்த ஆட்டோக்காரர்கள் எங்களிடம் வந்து, ``என்ன சார் நியாயம் இது. டாஸ்மாக்லாம் மூடாமல் விட்டுட்டு, எங்க பொழப்பு ஓடுற இந்த ஏரியாவை எல்லாம் மூடிட்டாங்க" என்றார். அருகிலிருந்த மற்றொரு ஆட்டோக்காரர், ``கொஞ்சநாள் இப்படி இருந்தா அப்புறம் சரியாகும்.
வந்தா யாரு அனுபவிக்கிறது?" என்று கேட்க, ``தமிழன எந்த வைரஸும் ஒண்ணும் செய்ய முடியாது" என்று பதிலளித்தபடி சிரித்தார். எனினும், சென்னை முழுவதும் முக்கிய அரங்குகள் மூடப்பட்டிருப்பதால் ஆட்டோ ஓட்டுநர்கள், சிறிய கடைக்காரர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளதை சில மணி நேரங்களிலேயே உணர முடிந்தது. அங்கிருந்து மெரினாவுக்குச்சென்றோம்.
வழக்கமான காலை சூழலில் மெரினாவில் காட்சி எப்படி இருக்குமோ அப்படியே இருந்தது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சில நாள்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் சாதாரண சோப்புகளில் கை கழுவினாலே போதும் என்றும் மாஸ்க் போன்றவை அணியும் அளவுக்கான சூழல் ஏற்படவில்லை என்றும் கூறியிருந்தார். எனினும், மக்கள் சானிடைசர் மற்றும் மாஸ்க் போன்றவற்றை கடைகளில் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
இதுதொடர்பாகத் தெரிந்துகொள்ள ஒருசில மெடிக்கல் ஷாப்களுக்குச் சென்றோம். அறையின் முன் பகுதியிலேயே சானிடைசர் பாட்டில்கள் அதிகளவில் வைக்கப்பட்டிருந்தன.
குறைந்தபட்ச விலையே 250 ரூபாய்க்கு மேல்தான் இருந்தது. விலை குறித்து ஆச்சர்யப்பட்டாலும் மக்கள் பலரும் சானிடசைர்களைக் கேட்டு வாங்கிச் சென்றனர். அவர்களிடம் இதுகுறித்துபோது,
``பாதுகாப்பு முக்கியம் தம்பி" என்றபடி சிரித்தனர். லோக்கல் மெடிக்கல் ஷாப்களில் முகக்கவசங்கள் அதிகளவில் இல்லை என்றே கூறினர்.பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை வழக்கம்போல இயங்கிக்கொண்டிருந்தன.
சாலையோரங்களில் சென்றுகொண்டிருந்த மக்களில் சிலர் முகக்கவசங்கள் அணிந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. டீக்கடைகள், சிக்னல் நிறுத்தங்கள், பஸ்களில் பயணிக்கும் பயணிகள் என எங்கு சென்றாலும் கொரோனா குறித்தே பேச்சுகள்தான் ஓடிக்கொண்டிருந்தன.
மக்களிடையே அதிகமாக அச்சம் ஒருபுறம் இருந்தாலும், தங்களது அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய அளவில் அந்த அச்சத்தைக் காண்பிக்காமல் `ஹேப்பி அண்ணாச்சி!' மனநிலையுடன் இருப்பதாகவே தோன்றியது.
எனினும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு அறிவித்துள்ள முக்கிய நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதும் மக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதும் கவனித்துக்கு உரியது.
மேலும், அரசின் உத்தரவுகள் சமீபத்தில்தான் வந்துள்ளது என்பதால் நாள்கள் செல்ல செல்லதான் விளைவுகள் படிப்படியாகத் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.