இந்தியாவில் முதல்முறை.. 18 தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி.. கட்டணம் எவ்வளவு...

டெல்லி: இந்தியாவில், இதுவரை 173 பேரை பாதித்து, நான்கு பேரைக் கொன்றுள்ளது, கொரோனா வைரஸ். இந்த நோய்க்கான பரிசோதனையைத் தொடங்க 51 தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கு உரிமம் வழங்குவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) முடிவு செய்துள்ளதாம்.


இதன் மூலம், கோவிட் -19 சோதனையை பரவலாக அதிகரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக 18 லேப்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (DGCI)
பல வல்லுநர்கள் கோவிட்-பாதித்த நாட்டிற்கு சென்று திரும்பியவர்கள், மற்றும் தீவிர அறிகுறி உள்ள நபர்களுக்கு மட்டுமே இப்போது பரிசோதனைகள் செய்யப்படுவதை தாண்டி,


அனைத்து மக்களுக்கு சோதித்து பார்க்கும் வகையில், டெஸ்டிங் பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். இதையேற்று அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


சமூக பரவல்
நாட்டில் நோய் ஆபத்தான "சமுதாய பரவல்" நிலைக்கு இன்னும் வரவில்லை. அந்த நிலைக்கு வந்துவிட்டால், பரந்து விரிந்த சோதனைகள்தான் நல்ல தீர்வை கொடுக்க முடியும்.


டெல்லி-என்.சி.ஆரில், இந்திரப்பிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகள், மெடந்தா-தி மெடிசிட்டி மற்றும் டாக்டர் லால் பாத் லேப்ஸ் போன்றவற்றில் உள்ள ஆய்வகங்களில் சோதனை வசதி ஏற்படுத்தப்படும் என தெரிகிறது. இதில் கோவிட் -19 ஐக் கண்டறிய தேவையான நிபுணத்துவம் மற்றும் தொற்று-கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் உள்ளன.


அங்கீகாரம்
அடையாளம் காணப்பட்ட அனைத்து 51 ஆய்வகங்களும் ஆய்வகங்களின் சோதனை மற்றும் பணிகளுக்காக, தேசிய அங்கீகார வாரியத்தில் (NABL) அங்கீகாரம் பெற்றவை.


இது சோதனையின் துல்லியத்தை உறுதி செய்வதற்கு நல்ல வழி எனக் கூறப்படுகிறது. கோவிட் -19க்கு ஏற்கனவே 72 அரசு ஆய்வகங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அவற்றுடன், இந்த தனியார் ஆய்வகங்களும் சேர்க்கப்படும்.


172 ஆய்வகங்கள்
கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் (சி.எஸ்.ஐ.ஆர்), பயோடெக்னாலஜி துறை (டி.பி.டி), பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு போன்ற அரசால் நடத்தப்படும் மேலும் 49 அரசு ஆய்வகங்கள் இந்த வார இறுதிக்குள், கோவிட்-19 சோதனையை தொடங்கும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது நோய்க்கான மொத்த ஆய்வக சோதனைகளின் எண்ணிக்கையை 172 ஆக அதிகரிக்க கூடும்.


கட்டணம்
ஒவ்வொரு சோதனைக்கும் சுமார் 5,000 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.


ஆனால் இதுவரை உறுதி செய்யவில்லை. அரசு இதுவரை ரூ.5000 செலவாகும் இந்த சோதனைகளை, இலவசமாக செய்து வருகிறது.


ஆனால் மிகவும் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு மட்டுமே செய்யப்படுகிறது. தனியார் லேப்கள் இந்த பரிசோதனையை செய்யும்போது, அவை பரவலாக பல மக்களையும் சென்று சேரும். இது நோய் பரவலை உடனே கண்டறிந்து சிகிச்சையளிக்க உதவும். இதற்கிடையேதான், முதல் கட்டமாக 18 லேப்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு.


சரியான லேப்புகள்
"முதல் கட்டத்தில், கோவிட் -19 சோதனைக்கு விதிக்கப்பட்டுள்ள உயிர் பாதுகாப்பு மற்றும் தர அளவுகோல்களை பூர்த்தி செய்யும் NABL- அங்கீகாரம் பெற்ற தனியார் ஆய்வகங்களை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். கலந்துரையாடல்கள் நடந்து கொண்டிருக்கின்றன"என்று சுகாதார அமைச்சகத்தின், இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறினார்.


"ஆய்வகத்தின் தரம் முக்கியமானது, ஏனென்றால் அவை தவறுதலாக, நோய் இல்லை என்றோ, அல்லது தவறுதலாக நோய் இருக்கிறதோ என்றோ கூறிவிடக் கூடாது. அது ஆபத்தானது. எனவேதான், லேப்புகளுக்கு, ஐசிஎம்ஆர் சரிபார்ப்பு முக்கியமானது," என்று அவர் மேலும், கூறினார்.


சோதனைகள் எப்படி நடக்கும்
"அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதிலும், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், பணியாற்றுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். லேப்புகளுக்கு வருவோர் மூலமாக, கொரோனா வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதை தனியார் துறை உறுதி செய்ய வேண்டும்.


பல ஆய்வகங்கள் ஏற்கனவே செய்து வரும் வீட்டுக்கே சென்று ரத்தம் அல்லது சளி மாதிரியை எடுப்பது, நல்ல யோசனையாக இருக்கும்.


ஆனால் சோதனை செய்வோர் எண்ணிக்கை அதிகரித்தால், ஒரு நேரத்தில் ஒரு நபர் செல்லக்கூடிய தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அவர்களிடம் சாம்பிள்களை கலெக்ட் செய்வது, நல்ல திட்டமாக இருக்கும், " என்று மேடந்தா-தி மெடிசிட்டி தலைவர் நரேஷ் ட்ரேஹான் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்