லஞ்சம் பெற்ற திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை நகரம் ராஜராஜன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் வாசலில், பக்தர்கள் உடைமைகள் மற்றும் செருப்புகள் பாதுகாக்கும் சிறிய பாதுகாப்பகம் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்த சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கிருஷ்ணவேணியின் பாதுகாப்பகத்தில் ‘லேப்டாப்’ வைத்திருந்த பையை வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, திரும்ப வந்து பையை வாங்கியபோது அதில் லேப்டாப் காணவில்லை. லேப்டாப் எங்கே என்று கிருஷ்ணவேணியிடம் கேட்டபோது, ஒரே மாதிரியான பையை வேறொருவருக்கு மாற்றிக்கொடுத்தது தெரிந்துள்ளது. இ
இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த அந்த இளைஞர் திருவண்ணாமலை நகரக் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கிருஷ்ணவேணி மீது புகார் கொடுத்துள்ளார்.
புகார்பெற்றுக்கொண்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன் மற்றும் அன்பழகன் இருவரும் அந்த இளைஞரிடம், `நீங்கள் உங்கள் ஊருக்குச் செல்லுங்கள் லேப்டாப் கிடைத்ததும் உங்களுக்கு போன் செய்கிறோம்.
அப்போது வந்து வாங்கிச்செல்லுங்கள் என்று கூறி அந்த இளைஞரை அனுப்பிவிட்டு, கிருஷ்ணவேணியிடம் லேப்டாப் எங்கே என்று கேட்டு விசாரித்துள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணவேணிக்கு ஆதரவாக அவரது மருமகன் அசோகன் என்பவர் காவல் நிலையத்துக்கு வந்து, சப்-இன்ஸ்பெக்டர்களிடம் பேசியுள்ளார்.
அப்போது அவர்கள், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.25 ஆயிரம் கொடு. இல்லையெனில் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணவேணியைச் சிறையில் அடைத்து விடுவோம் என்று கூறியதாகத் தெரிகிறது. இதில் பயந்துபோன அசோகன், முதல் தவணையாக ரூ.15 ஆயிரம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
அதன் பிறகு ரூ.10 ஆயிரம் தருவதாகச் சொல்லிவிட்டு வந்துள்ளார்.ஆனால், அந்தத் தொகையைக் கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளார்.
இந்த நிலையில் மீதி 10 ஆயிரத்தைக் கேட்டு மாறிமாறி போன் செய்துள்ளனர் சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவரும். இதனால் கடுப்பான அசோகன் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் கொடுத்த ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரம் பணத்தை சப்-இன்ஸ்பெக்டர்களிடம் கொடுத்துள்ளார் அசோகன். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், காவல் நிலையத்தில் புகுந்து சப்-இன்ஸ்பெக்டர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
லேப்டாப் காணாமல் போனது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல், சப்-இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் லஞ்சம் வாங்கியதற்காக இருவரையும் கைது செய்தனர் லஞ்ச ஒழிப்பு போலீஸார்.