வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்த 600 பேர் கையில் முத்திரை பதிப்பு: கடையநல்லூரில் அதிகாரிகள் அதிரடி
கடையநல்லூர்: வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கடையநல்லூருக்கு வந்தவர்களின் வீடுகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் கிழிக்கப்பட்டதால் அவர்களை தனிமைப்படுத்தும் விதமாக கையில் அழியாத மையால் முத்திரை வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் சவூதி, துபாய், கத்தார், ஓமன், சிங்கப்பூர், சார்ஜா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் ஊர் திரும்பினர்.
அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனை நடத்தினர்
அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் சில நாட்கள் தனிமைப்படுத்தி இருக்குமாறு ஆலோசனைகளை வழங்கினர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளின் முன்பு நகராட்சி சுகாதார துறை சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த வீடுகளில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம். வெளியாட்கள் யாரையும் உள்ளே அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் அதையும் தாண்டி ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வீடுகளில் பலர் ஸ்டிக்கர்களை கிழித்துள்ளதாக நகராட்சிக்கு புகார்கள் வந்தது.
இதனையடுத்து நேற்று துணை ஆட்சியர் குணசேகரன், தாசில்தார் அழகப்பராஜா, நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி தலைமையில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த நபர்களின் வீடுகளுக்கு நேரிடையாக சென்று அவர்களது இடது கையில் அழியாத மையால் முத்திரையிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து 348 பேர், வெளிமாநிலங்களில் இருந்து 252 பேர் என மொத்தம் 600 பேர் சொந்த ஊரான கடையநல்லூருக்கு வந்துள்ளனர்.
இவர்களை தனிமைப்படுத்தும் விதமாக ஏற்கனவே அவர்களது வீடுகளின் முன்பாக நகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஸ்டிக்கரை கிழித்து விட்டு சிலர் வெளியே வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து இன்று முதல் அவர்கள் 28 நாள் தனிமை படுத்தும் விதமாக அவர்களது இடது கையில் அழியாத மையால் முத்திரை குத்தப்பட்டுள்ளது.
இதையும் மீறி அவர்கள் வெளியே வந்தால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.