வாக்கி டாக்கியை தொலைத்த சப் இன்ஸ்பெக்டர்..! என்ஜீனியரை பிடித்து தாக்குதல்
விருதுநகர் அருகே பாஸ்போர்ட் சரிபார்த்தலுக்காக காவல் நிலையம் சென்ற என்ஜீனியர் மீது வாக்கி டாக்கியை திருடியதாக குற்றஞ்சாட்டி அடித்து உதைத்த சப் இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வாக்கி டாக்கியை பொறுப்பில்லாமல் தொலைத்துவிட்டு இளைஞர் மீது திருட்டுப்பழி சுமத்தப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அடுத்த சாலைமறைக்குளத்தை சேர்ந்தவர் தனசேகர் மகன் தவக்கண்ணன். டிப்ளமோ என்ஜினீயரான இவர் வெளி நாட்டிற்கு வேலைக்கு செல்லும் முனைப்போடு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்தார்.
அ.முக்குளம் காவல் நிலையத்தில் இருந்து பாஸ்போர்ட் சரிபார்த்தல் விசாரணைக்கு அழைத்ததால் கடந்த 21 ந்தேதி தவக்கண்ணன் தனது உறவினர் உடன் காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் என்பவர், தனது வாக்கிடாக்கியை தவக்கண்ணன் திருடிச்சென்ற சிசிடிவி ஆதாரம் இருப்பதாக கூறி வீடுதேடி வந்து தவக்கண்ணனை அடித்ததாக கூறப்படுகின்றது.
மேலும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லும் வழியில் வாக்கி டாக்கி கிடைத்து விட்டதாக தகவல் வந்த நிலையிலும் வம்படியாக தவக்கண்ணனை காவல் நிலையம் கொண்டுச் சென்று வாக்கி டாக்கியை திருடியதாக ஒப்புக்கொள்ளச்சொல்லி உதவி ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பெரியசாமி, காவலர்கள் தங்கபாண்டியன் ,காமராஜ், அழகுமலை,சரவணன், செல்வராஜ், ஏட்டு பெரியசாமி என ஆளாளுக்கு மாற்றி மாற்றி அடித்து உதைத்ததாக கூறப்படுகின்றது.
பலத்தகாயம் அடைந்த நிலையில் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசாரிடன் அடாவடி செயல் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றதால் எந்த ஒரு குற்றவழக்கிலும் தொடர்பு இல்லாத தவக்கண்ணன் மீது பொய்யான திருட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக காப்பாற்றப்பட்டுள்ளார். இருந்தாலும் பலத்த காயம் அடைந்த தவக்கண்ணன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தனது மகன் போலீசாரின் தாக்குதலுக்குள்ளாகி எழுந்து நடக்க இயலாமல் கிடப்பதை கண்டு அவரது தந்தை கண்ணீர்விட்டு கதறினார்.
இதற்கிடையே உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசாரை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறக்கியதால் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.
அதன் படி அவரிடம் நடந்த விசாரணையில், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராவே இல்லை என்பதும், உதவி ஆய்வாளர் மணிகண்டன் தனது கவனக்குறைவால் வாக்கிடாக்கியை காவலர் குடியிருப்பில் தவற விட்டு வந்து, அதனை மறைக்க தவக்கண்ணன் மீது பழியை போட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் அருகில் உள்ள வீரசோழன் காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு அவர் அளித்த இந்த விளக்கமே சாட்சி.
காவலர்கள், சமூகத்தில் மறைந்துள்ள குற்றவாளிகளை களையெடுக்க வேண்டுமே தவிர, விசாரணை என்ற பெயரில் அப்பாவிகளை அழைத்துச்சென்று அடித்து உதைத்து புதிய குற்றவாளிகளை உருவாக்கி விடக்கூடாது என்பதே அனைவரின் ஆதங்கமாக உள்ளது.