டிக்டாக்" மோகத்தில் மூழ்கிய மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதல் கணவன்
மதுரையில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதல் கணவனை போலீசார் கைது செய்தனர். டிக்டாக் மோகத்தில் மூழ்கிய மனைவியை பல முறை கண்டித்தும் கேட்காததால் கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை திருநகர் சூறாவளிமேட்டைச் சேர்ந்தவர் அசோக். இவர் அழகு கலை நிபுணரான சுதா என்ற பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
இத்தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ள நிலையில், டிக்டாக் மீது அதிக நாட்டம் கொண்ட சுதா நாள் பொழுதை டிக்டாக்கிலேயே கழித்து வந்துள்ளார்.
காதல் பாடல்களுக்கு ரொமான்ஸ் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த சுதாவுடன் பல ஆண்கள் டூயட் செய்திருக்கின்றனர்.
இதனை பார்த்த நண்பர்கள் சிலர் அசோக்கிடம் தெரிவிக்க, வெறுப்படைந்த அவர் மனைவியிடம் டிக்டாக் செய்வதை நிறுத்தும் படி கூறியுள்ளார்.
ஆனால் அசோக் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றித்திரிந்து வந்ததால், அதனை அலட்சியப்படுத்தி வந்துள்ளார் சுதா. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
இதற்கிடையே கணவரிடம் தெரிவிக்காமல் வேலை நிமிர்த்தமாக சுதா கோவைக்கு சென்ற நிலையில், இரு குழந்தைகளையும் தனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு வந்துள்ளார் அசோக்.
பின்னர் வீடு திரும்பிய சுதா செவ்வாய் கிழமை அன்று குழந்தைகளை அழைத்து வரும் படி கூற தம்பதிக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியுள்ளது.
அப்போது கோபம் அடைந்த அசோக் மனைவியை தாக்கி கீழே தள்ளி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். அதன் பிறகு தலைமறைவான அவரை வலைவீசி தேடி வந்த திருநகர் போலீசார், திருப்பரங்குன்றம் அருகே பதுங்கி இருந்த அசோக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தன.
அசோக்கிற்கு வேலை ஏதும் கிடைக்காததால் மனைவியின் சம்பாத்தியம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார்.
இதனால் தன்னை மதிக்காமல் டிக்டாக்கில் மூழ்கிய சுபா அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று வந்ததால் அவரது நடந்தையில் சந்தேகம் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
மனைவியின் டிக்டாக் வீடியோக்களை பார்த்து நண்பர்கள் கேலி செய்வதால் அதனை பலமுறை தவிர்க்க கூறியும் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்ததால் மனைவி மீது வெறுப்படைந்ததாகவும், சம்பவத்தன்று நடந்த தகராறின் போது விவாகரத்து தரச் சொல்லி கேட்டு வாக்குவாதம் செய்ததால் கோபத்தில் சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக கூறியுள்ளார்.