ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் உணவகங்கள், கடைகள் செயல்படாது: வணிகர்கள் சங்கம் அறிவிப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தமிழகம் முழுவதும் உணவகங்கள், கடைகள் மூடப்படும் என்று வணிகர் சங்கப் பேரமைப்பு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து நேற்று தொலைக்காட்சி வாயிலாக பேசிய பிரதமர் மோடி, ‘வரும் ஞாயிறு அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களே ஊரடங்கு நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அன்றைய தினம், மக்கள் யாரும் மிகமிக அத்தியாவசியம் இன்றி வெளியே வர வேண்டாம். மருத்துவனைகள் உள்ளிட்ட இடங்கள் வழக்கம் போல இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மோடியின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படும் என்று வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.
மேலும், தமிழகம் முழுவதும் உணவகங்களும் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, மார்ச் 22-ம் தேதி கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது என்று வியாபாரிகள் சங்கமும் அறிவித்துள்ளது.
அதேபோல, தனியார் பால் நிறுவனங்களும் ஞாயிற்றுக்கிழமை பால் விநியோகம் செய்ய முடியாது என்று அறிவித்துள்ளனர்.