கதவுகள் இல்லாத கழிப்பறை... ஸ்மார்ட் சிட்டியாகும் நெல்லை மாநகராட்சியின் அவலம்!
நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணிகள் நடந்து வரும் நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் கழிவறைகள் கதவுகள் இல்லாமல் பயன்படுத்தப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லை மாநகராட்சியில் 78 கோடி ரூபாய்க்கு சந்திப்பு பேருந்து நிலையம் 230 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் 428 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம் சுமார் 30 கோடி மதிப்பீட்டில் பொருட்காட்சி திடலில் வணிக வளாகம் என பல்வேறு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை இதில் பல்வேறு முறைகேடுகள் ஊழல்கள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறையில் கதவுகளே இல்லாமல் திரைச்சீலைகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளது காற்றில் திரைச்சீலை பறந்தால் கழிப்பறையை பயன்படுத்துபவரின் நிலை என்னவாகும் என்று சற்றும் யோசிக்காத அதிகாரிகள் நெல்லை மாநகராட்சியில் பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் பேருந்து நிலைய கழிப்பறையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் அமைப்தோடு கழிப்பறையின் கதவுகளை உடனடியாக அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் பணம் செலவழித்து மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற நினைப்பவர்கள் அடிப்படையில் கோட்டை விட்டுள்ளனர் என்பது இச்சம்பவம் மூலம் தெரியவந்துள்ளது.
ஆயிரம் கோடியை செலவழிக்கும் அதிகாரிகளால் மக்களின் அடிப்படை தேவையான கழிவறை கதவு அமைக்க 5000 ரூபாய் செலவழிக்க முடியாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையில் விரைவாக கதவுகள் அமைக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனாலும் பனிரெண்டு மணி நேரத்தைக் கடந்தும் இதே நிலையே காணப்படுகிறது.