ராஜீவ் கொல்லப்பட்ட நினைவிடத்தில் சர்ச்சை டிக் டாக்: நாம் தமிழர் கட்சி இளைஞர் மீது காங்கிரஸார் புகார்
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர், சீமான் பேச்சை டப்ஸ்மாஷ் செய்து ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நின்று அவரது கொலையை நியாயப்படுத்தும் வகையில் சர்ச்சையான டிக் டாக் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் மரணத்தை நியாயப்படுத்தி பேசியது சர்ச்சையானது. அந்தக் கூட்டத்தில் சீமான், "ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படை என்கிற அநியாயப் படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்தார். என் இனத்தின் எதிரியான ராஜீவை தமிழர் தாய் மண்ணில் கொன்று குவித்தது வரலாறு. ஒரு காலம் வரும். வரலாறு திருப்பி எழுதப்படும்'' என்று பேசினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியினர் இதைக் கண்டித்தனர். காவல் நிலையத்தில் சீமான் மீது புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி போலீஸார் சீமான் மீது, வன்முறையைத் தூண்டுதல் (153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
சீமானைக் கைது செய்யவேண்டும் என்கிற கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதுகுறித்து சீமானிடம் அப்போது செய்தியாளர்கள் கேட்டபோது, தனது கருத்திலிருந்து தாம் பின்வாங்கப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர் திடீரென ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தின் உள்ளே சென்று டிக் டாக் வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார்.
அந்த வீடியோவில், ராஜீவ் நினைவிடத்தில் நின்றுகொண்டு சீமான் பேசிய ஒரு வசனத்தைப் பேசினார். ''நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள். இனிமேல் எந்த நாட்டின் அதிபராவது எம் இனத்தின் மீது கைவைத்தால் அவர்களுக்குத் தூக்குதான்'' என்று பேசி ராஜீவ் உயிரிழந்த இடத்தில் உள்ள நினைவு கல்வெட்டைக் காட்டுகிறார்.
இதைப் பார்த்த காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். தேசியப் பாதுகாப்புத் தடுப்புச் சட்டத்தில் சாட்டை துரைமுருகனைக் கைது செய்ய வேண்டும் என ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கட்சியினர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்