ஊரடங்கு நாட்களில் கைகொடுக்கும் மாடித் தோட்டம்: மனதுக்கு மகிழ்ச்சி தருவதுடன் வீட்டுத் தேவையையும் பூர்த்திசெய்கிறது
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்களுக்கு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் அன்றாடத் தேவைகளுக்கான காய்கறிகள் வாங்குவதற்காக வெளியே செல்வது பலரும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்.
அதேநேரம் வீட்டிலேயே தோட்டம் அமைத்துள்ளவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளித்துவிடுகின்றனர்.
இவ்வாறு வீட்டுத் தோட்டம் அமைத்துள்ள சிலரிடம் இதுகுறித்து உரையாடினோம். அவர்கள் அளித்த தகவல்கள் பலருக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மலைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. பணியில் இருந்து ஓய்வுபெற்றவரான இவர், 5 ஆண்டுகளாக மாடித் தோட்டத்தைப் பராமரித்து வருகிறார். இதற்காக. தோட்டக்கலைத் துறை சார்பில் வழங்கப்படும் மாடித் தோட்ட உபகரணங்களை வாங்கினார்.
மண்ணுக்குப் பதிலாகத் தரப்பட்ட தேங்காய் நார்க் கழிவு, எடை குறைவாக இருப்பதோடு தண்ணீரும் குறைவாகத் தேவைப்பட்டது. இதனால் அவரின் தோட்ட ஆர்வம் அதிகரித்தது.
இவரது வீட்டுத் தோட்டத்தில் கத்தரி, வெண்டை, பச்சை மிளகாய், டபுள் பீன்ஸ், பாகற்காய், கறிவேப்பிலை, அகத்திக் கீரை, மாதுளை உள்ளிட்டவை செழித்து வளர்ந்துள்ளன.
இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘இந்த ஊரடங்கு இன்னும்கொஞ்சம் நாளைக்கு நீடிக்கும்னுதோணுது. அதனால கீரை வகைகளைப் போட்டு வைத்திருக்கிறேன். முளைக்கீரை, தண்டுக்கீரை, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை எல்லாம் சீக்கிரம் வளர்ந்துடும்” என்கிறார் புன்னகையுடன்.
ஆரோக்கியம் தரும் மூலிகைகள்
வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணிபுரியும் ராணிப்பேட்டையைச் சேர்ந்த தமிழ்த்தென்றல், ஊரடங்கு நேரத்தில் தங்கள் வீட்டுத் தோட்டம் இருவகையில் பயன்படுவதாகச் சொல்கிறார்.
“தோட்டத்தைப் பராமரிப்பது, புதிதாகப் பயிரிடுவது என நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட முடிகிறது. அதேநேரம் எங்கள் வீட்டு சமையல் தேவையை சமாளிப்பதில் எங்கள் தோட்டமும் ஓரளவு கைகொடுக்கிறது” என்கிறார்.
இவரது தோட்டத்தில் முடக்கறுத்தான், பிரண்டை, வெற்றிலை, ஓமவல்லி, துளசி, கற்றாழை என்று மருத்துவப் பயன் நிறைந்த செடி கொடிகள் அதிக அளவில் உள்ளன.
கரோனா தொற்று ஏற்பட்டால் சுவாசப் பாதைதான் முதலில் பாதிப்புள்ளாகிறது. அதனால், சளி, இருமல் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது என்பதால் குழந்தைகளுக்கும் எங்களுக்கும் லேசாகச் சளித் தொற்று வருவதுபோல் இருந்தாலே ஓமவல்லி இலைகளையும் துளசியையும் சாப்பிட்டு விடுவோம்.
சிலநேரம் கஷாயமாக வைத்தும் குடிப்போம். இவ்வளவு நாட்களாக எங்கள் வீட்டுத் தோட்டத்தின் அருமை தெரியவில்லை. இப்போது புரிந்து கொண்டோம்’’ என்றார்.
ஒரே கொடியில் 80 காய்கள்
சாலையோரங்களில் நடுவதற்காக மரக்கன்றுகளை வளர்த்துக் கொடுக்கும் நன் மங்கலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் கூறும்போது, ‘‘எங்களது வீட்டுத் தோட்டத்தில் புடலை, அவரை, கத்தரி, பச்சை மிளகாய், தக்காளி இப்படி நிறைய வளர்த்து அறுவடை செய்தாச்சு.
யானைக் கொம்பன்னு சொல்லக்கூடிய சிவப்பு வெண்டைக்காயும் அருமையா வளர்ந்து பலன் தந்தது. பீர்க்கன்காயில் ஒரே கொடியில் 80 காய்களை அறுவடை செய்தேன்.
செடிகளின் உரத் தேவையைக் கூடுமானவரை நானே சமாளித்துவிடுவேன். வாழைப்பழத் தோலை தண்ணீரில் ஊறவைத்து 3 நாட்கள் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி அதனுடன் தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஊற்றுவேன்.
முட்டை ஓட்டைக் காயவைத்துப் பொடித்து வைத்திருக்கிறேன். அதுவும் நல்ல உரம்தான். 15 நாட்களுக்கு ஒருமுறை இவற்றைப் போட்டால் போதும்” என்கிறார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாகமாடித் தோட்டத்தைப் பராமரித்து வருகிறார் சென்னை போரூரைச் சேர்ந்த எஸ்.ராஜகுமாரி.
செடிகளை மாடியில் அதிகம் வைத்தால்வீடு விரிசல் விட்டுவிடும், தண்ணீர் கசியும் என்றெல்லாம் சுற்றிஇருப்பவர்கள் சொன்னபோதும் மனம் தளராமல் செடிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறார் ராஜகுமாரி.
தேவையை சமாளிக்க..
வீட்டைச் சுற்றி நெல்லி, முருங்கை, வாழை, மா எனப் பல வகை மரங்களையும் வளர்த்திருக்கிறார். ‘‘செம்பருத்தி, நித்தியமல்லி, நந்தியாவட்டை, இருவகை அரளி, மல்லிகை என்று பலவகையான பூச்செடிகள் பூத்துக்குலுங்குவது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது’’ என்கிறார்.
மேலும். இவரது வீட்டு மாடியில் கத்தரி, தக்காளி, சுண்டைக்காய், பச்சை மிளகாய், புதினா, மணத்தக்காளி என்று பலவும் செழித்து வளர்ந்துள்ளன.
இவற்றை வைத்தே தன் வீட்டுச் சமையல் தேவையையும் சமாளித்து விடுகிறார்.
‘கரோனாவை வெல்ல நோய் எதிர்ப்பு சக்தி அவசியம் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர். அதனால் எங்கள் வீட்டில் இருக்கும் நெல்லிக்காயில் ஊறுகாய், சாதம்,ஜூஸ் என விதவிதமாகச் செய்துசாப்பிடுகிறோம்’ என்று உற்சாகமாகச் சொல்கிறார் ராஜகுமாரி.