பெண்களை நசுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள்..
2018-ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று மீ டூ விவகாரம். இந்தியா முழுவதும் பல துறைகளில் மீ டூ விவகாரம் அதிர்வலையை ஏற்படுத்தியது. மீ டூ ஹேஷ்டேக்கை பயன்படுத்தி திரைத்துறை நடிகைகள் உட்பட பல பிரபலமான பெண்களும் தங்கள் வாழ்வில் நடந்த பாலியல் தொல்லைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
தமிழகத்திலும் கோலிவுட் வட்டாரத்தை இவ்விவகாரம் சுழன்று அடித்தது. இதற்கிடையே மீடூ புகார்கள் சரியானவையா? அல்லது காலதாமதமானவையா? என்ற விவாதங்கள் எழுந்தன.
பணியிடங்களில் பாலியல் ரீதியாக பெண்கள் தொல்லைக்கு ஆளாவதும், அதற்காக அவர்களின் வளர்ச்சி தடுக்கப்படும் காலம் காலமாக நடந்து வருவது கசப்பான உண்மை. இது பெரிய தொழில் நிறுவனங்களில் மட்டுமே நடக்கிறது என்பதெல்லாம் இல்லை. சிறிய கடைகள் முதல் சினிமா, ஐடி, அரசியல் என பல இடங்களிலும் நடக்கிறது.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வரலட்சுமி, நான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட பட வாய்ப்புக்காக என்னை அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் கூறினார்கள். ஆனால் அந்த வாய்ப்பையெல்லாம் நான் மறுத்துவிட்டேன்.
எல்லாம் நடந்த பிறகு பெண்கள் புகார் தெரிவிப்பதை ஏற்க முடியாது. தங்களை பாதுகாத்துக்கொள்ள பெண்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
சினிமாவில் பட வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்கள் குறிவைக்கப்படுவதும், பின்னாளில் அது மீடூவாக சர்ச்சை எழும்புவதும் தொடர்கதையாகி வருகிறது.
சினிமா மட்டுமின்றி பணிபுரியும் இடங்களில் எல்லாம் சொல்ல முடியாத துயரத்தை அனுபவித்து வருவதாக குமுறுகின்றனர் பெண்கள். பணியிடங்களில் அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள், பெண்களின் திறமைகளை மதிக்காமல் தங்களின் விருப்பத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புவதே பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய கொடுமை என்கின்றனர் பணிபுரியும் பெண்கள்.
சினிமா, ஐடி, பெரிய தொழில் நிறுவனங்கள் என பல இடங்களில் தொடரும் பாலியல் துன்புறுத்தல்களை வெளிக்கொணர சில அமைப்புகள் இருக்கின்றன.
ஆனால் எத்தனையோ அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு எதிரான கொடுமைகளை வெளியில் சொல்ல வாய்ப்பு இல்லாமல் சத்தமில்லாமல் கலங்கிக் கொண்டு இருக்கின்றனர்.
ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட சமீபத்தில் ஆய்வு ஒன்று சொல்வது என்னவென்றால், ஹைதராபாத் ஓல்டு சிட்டி பகுதியில் குறைந்து வருமானத்திற்காக வேலை பார்க்கும் பெண்களில் 80% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். அவர்களில் பெரும்பாலான பெண்கள் அமைப்புசாரா துறைகளில் பணிபுரிகின்றனர் என்பதால் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க அமைப்பு ஏதும் இல்லை என்பதுதான் கொடுமை.
அது மட்டுமின்றி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புகார் அளிக்கலாம், சட்டத்தில் இடமுண்டு என்ற விவரங்கள் கூட தெரியாமல் விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
மேலும் கொடுமை என்னவென்றால், பாலியல் துன்புறுத்தலை வெளியில் சொன்னால் சம்பந்தப்பட்ட அதிகாரமிக்கவர்களால் பாதிப்பு ஏற்படலாம் என்றும், வேலை போய்விடும் என்றும் பயப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பல காரணங்களால் வீட்டில் முடக்கப்பட்ட பெண்கள் இன்று பல தளங்களிலும் தங்கள் பாதங்களை பதிக்கத் தொடங்கியுள்ளனர். எத்தனையோ தடைகளைத் தாண்டி ஏதோ ஒரு வேலைக்காக பணியிடங்களை நோக்கி படையெடுக்கிறார்கள் பெண்கள். அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவது அவர்களின் வளர்ச்சியை மட்டுமல்ல தேசத்தின் வளர்ச்சியையும் நசுக்கும் கொடுமை.
பெட்டிக்கடை, கட்டட வேலை என பணிபுரியும் இடங்களில் வித்தியாசமின்றி அனைத்து தளங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அமைப்பு தொடங்க வேண்டும் என்பதும் தங்களுக்கு எதிரான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க பெண்களுக்கு இந்த சமூகம் தைரியம் கொடுக்க வேண்டுமென்பதுமே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.