கொரோனா குறித்து வதந்தி பரப்பிய ஒருவர் மதுரையில் கைது!
மதுரையில், கொரோனா வைரஸ் பாதித்த 47 பேரை அடைத்து வைத்திருப்பதாக, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபரை போலீசார் கைது செய்தனர்.
கொரோனா அச்சுறுத்தலை விட அதனை வைத்து பரப்பப்படும் வதந்திகள் அதிகளவிலான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. சமூகவலைதளங்களில் கொரோனா வைரஸ் குறித்து நாள் தோறும் வித விதமான வதந்திகள் பரப்பப்படுகின்றன.
கோழிகள் மூலம் கொரோனா என்று கிளம்பிய கட்டுக்கதைக, இன்று சைவ உணவில் வந்து நிற்கிறது. இந்நிலையில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று அரசு எச்சரித்தாலும், வதந்திகள் நீண்டு கொண்டே செல்கிறது.
அந்த வகையில், மதுரை மாவட்டம் ராஜாகூர் பகுதியில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக, திருச்சி மாவட்டம் இலங்கனூரைச் சேர்ந்த செல்வம் என்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ராஜாகூர் கிராம நிர்வாக அலுவலர் ஆண்டாள், இந்த வீடியோ குறித்து புகார் அளித்தார்.
அதன்பேரில், தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், வதந்தியை பரப்புதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார், வீடியோ வெளியிட்ட செல்வத்தை கைது செய்தனர்.