ஊரடங்கால் ஒருவேளை மட்டுமே சாப்பாடு.. மாற்றுத்திறனாளி தம்பதிகளின் அவலநிலை
ஊரடங்கு நடைமுறையுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவேளை மட்டுமே சாப்பாடுவதாக மாற்றுத்திறனாளி தம்பதிகள் கூறியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் வீரன் - ராணி தம்பதி, கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளியான ராணியை, சுமை தூக்கும் தொழிலாளியாக இருந்த வீரன் கரம் பிடித்தபோது அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் நகர்ந்தன.
தினக்கூலி தொழிலாளியான வீரன் மூட்டைதூக்கி ராணியைக் காப்பாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீரன் திடீரென பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு தங்கள் குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறிவிட்டதாக வேதனையுடன் தெரிவிக்கிறார் ராணி.
கணவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட பிறகும் மனம் தளராமல் அவருக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்துவிட்டு, தினக்கூலி வேலைக்குச் சென்று மாதம் 4000 ரூபாய் வருமானத்தில், கணவனைக் காப்பாற்றி் வந்தார் ராணி.
குழந்தைகள் இல்லாத இந்தக் குடும்பத்தில் தற்போது கொரோனா ஊரடங்கால் ஒரு நாளைக்கு ஒருவேலை உணவு மட்டுமே சாப்பிட்டு வருவதாக தம்பதிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தான் பத்து முறைக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைக்காக மனு அளித்தும், அரசிடம் இருந்து எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என ததும்பும் குரலில் தெரிவித்த ராணி, கொரோனா ஊரடங்கு முடிவதற்குள் தங்களது உயிர் பிரிந்துவிடும் என்று வேதனையுடன் கூறுகிறார்.
மருத்துவ செலவிற்காகவும், அடுத்த வேலை உணவிற்காகவும் அரசு உதவி செய்யும் என்ற நம்பிக்கையில் இந்த மாற்றுத்திறனாளி குடும்பம் காத்திருக்கிறது. அரசின் கருணைப்பார்வை இவர்கள் மீது படுமா?