மே.,1 வரை மழை பெய்யும் ; சென்னை வானிலை மையம் அறிக்கை
சென்னை : 'தமிழகம், புதுச்சேரியில், மே, 1 வரை மழை தொடரும். வங்கக் கடலில், சூறாவளி காற்று வீசும்' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இன்று முதல், மே 1 காலை வரை, தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில், சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதேபோல், கடலோரத்திலிருந்து தொலைவில் உள்ள மாவட்டங்களிலும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வெப்ப சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், பல இடங்களில், மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆந்திராவைஒட்டிய, மேற்கு மத்திய வங்கக் கடல், கேரளாவை ஒட்டிய, தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் குமரிக் கடல் பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசும். எனவே, அந்த பகுதிகளுக்கு, மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இதற்கிடையில், அந்தமானின் தெற்கு பகுதியில், வங்கக் கடலில், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது இன்னும் மூன்று நாட்களில், காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும்.
அதனால், அந்த பகுதிகளில், அடுத்த மாதம் 1ம் தேதி வரை, கடல் அலைகள் கொந்தளிப்பாக காணப்படும்.பெரம்பலுார் மாவட்டம், செட்டிகுளத்தில், நேற்று அதிகபட்சமாக, 6 செ.மீ., மழை பெய்துள்ளது.
சென்னை - தரமணி, 5; திருத்தணி, சூளகிரி, காஞ்சிபுரம், செய்யூர், சென்னை - அண்ணா பல்கலை, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
வேலுார், எண்ணுார், பரமக்குடி, 3; மாதவரம், பூந்தமல்லி, மானாமதுரை, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, 2; சென்னை விமான நிலையம், தாம்பரம், சங்கரன்கோவில்,கொடைக்கானல், ஆய்க்குடி, சென்னை -நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லுார், இளையான்குடியில், 1 செ.மீ., மழை பெய்துள்ளது. இவ்வாறு, வானிலை மையம் அறிவித்துள்ளது.