இந்திய தொலை தொடர்பு சந்தையில் நுழைந்தது பேஸ்புக்! ஜியோவில் பல்லாயிரம் கோடி முதலீடு
டெல்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக் நிறுவனம் வாங்கி உள்ளது. ஜியோ நிறுவனத்தின் 9.9 சதவீத பங்குகளை 43,574 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் நிறுவனம்.
ஜியோவின் இந்த விற்பனை நடவடிக்கைகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் (RIL) இன் கடன் சுமையை குறைக்க உதவும், அதே நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய இந்திய சந்தையில் உறுதியான இடத்தை இந்த டீல் மூலம் பெறுகிறது.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான அசுர வளர்ச்சி அடைந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை 5.7 பில்லியன் டாலருக்கு (ரூ. 43,574 கோடி) பேஸ்புக் வாங்கியுள்ளது, இந்த ஒப்பந்தத்தால் ஜியோ நிறுவனத்தின் மதிப்பு 65.95 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஆர்ஐஎல் விளக்கம்
இந்த ஒப்பந்தம் குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கூறுகையில், இது உலகில் எங்கும் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தால் சிறுபான்மை பங்குகளுக்கான மிகப்பெரிய முதலீடு என்றும், இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு என்றும் கூறியுள்ளது.
வர்த்தக சேவைகளை அறிமுகப்படுத்திய மூன்றரை ஆண்டுகளில், சந்தை மூலதனத்தால் இந்தியாவில் பட்டியலிடப்பட்ட டாப் 5 நிறுவனங்களில் ஜியோவும் ஒன்று என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜியோவுக்கு பாராட்டு
பேஸ்புக் நிறுவனம் இந்த ஒப்பந்தம் பற்றி கூறுகையில், "இந்த முதலீடு இந்தியா மீதான எங்கள் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, மேலும் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் ஜியோவால் தூண்டப்பட்ட வியத்தகு மாற்றத்தால் ஏற்பட்ட எங்கள் உற்சாகத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
நான்கு ஆண்டுகளுக்குள், ஜியோ 388 மில்லியனுக்கும் அதிகமான மக்களை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளது, இது புதுமையான புதிய நிறுவனங்களை உருவாக்கத் தூண்டுகிறது. புதிய வழிகளில் மக்களை இணைக்கிறது. இந்தியாவில் அதிகமானவர்களை ஜியோவுடன் இணைக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
பேஸ்புக் உதவி
இந்தியாவில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள். அதிலும் குறிப்பாக இந்தியா முழுவதும் 60 மில்லியனுக்கும் அதிகமான சிறு வணிகங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது எங்கள் இலக்கு" என்று தெரிவித்துள்ளது.
பயன்படுத்த முடிவு
வெறும் முதலீடு மட்டுமின்றி , ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் பேஸ்புக்கின் வாட்ஸ்அப் சேவை ஆகியவை இணைந்து வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ஜியோமார்ட் வலைதளம் மூலம் புதிய அளவில் வணிகத்தை விரிவுப்படுத்தி சிற வணிகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.
முகேஷ் அம்பானி அதிரடி
முகேஷ் அம்பானி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய ஜியோ நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக மிக குறுகிய காலத்தில் அதிவேகமாக வளர்ந்துள்ளது. இலவச கால்அழைப்பு, அளவில்லா இலவச டேட்டா மற்றும் பல்வேறு விதமான சலுகைகள், திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் இசை உள்ளிட்ட பல புதுமையான முயற்சிகள் மூலம் ஜியோ நிறுவனம் சுமார் 340 மில்லியன் வாடிக்கையாளர்களை இந்தியாவில் கொண்டுள்ளது.
ரிலையன்ஸ் அதிரடி
ஜியோவுடன் பேஸ்புக் செய்த இந்த ஒப்பந்தத்தால் ஆர்ஐஎல் இன் கடன் சுமை குறையும். 2016 ஆம் ஆண்டில் ஜியோவைத் தொடங்க அம்பானி சுமார் 40 பில்லியன் டாலர் முதலீடு செய்தார்.
ஈ-காமர்ஸ் மற்றும் மளிகை போன்ற நுகர்வோரை அதிகம் ஈர்க்கும் ஒவ்வொரு தொழிலையும் ஜியோவில் இணைத்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளர்களில் ஒருநிறுவனமாக உருவாகி உள்ளது.