கரோனா ஊரடங்கு: பெண்கள் குழந்தைகளுக்குத் துணை நிற்கும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார்
கரோனா ஊரடங்கு காலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்கவும், உடல், மனம் சார்ந்த பிரச்சினைகள், குற்றச் சம்பவங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக அத்துறையின் சென்னை துணை ஆணையர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் அலுவலகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“தமிழக காவல் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தமான குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு சிறப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. சென்னை மாநகர காவல் துறையில் கடந்த ஆண்டு ஜூன் 03 அன்று தொடங்கப்பட்ட இந்த சிறப்புப் பிரிவு செவ்வனே செயல்பட்டு வருகிறது
உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா கொடிய கிருமி தொற்று சம்பந்தமாக நாடு முழுவதும் பிரகடனப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவின்போது கடந்த ஒரு மாதமாக சென்னை மாநகரம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆளிநர்கள் அனைவரும் துடிப்பாகச் செயல்பட்டு; குடும்ப சச்சரவுகள், பாலியல் குற்றங்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தி விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தனர்,
ஊரடங்கு உத்தரவு காலத்தின்போது அவசர எண் 100-க்கு 549 அழைப்புகள் பெறப்பட்டு பெண் காவல் ஆளிநர்கள் நேரடியாக சென்று விசாரணை செய்து. உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டது, பெண்களுக்கான அவசர உதவி எண் 1091 என்ற சிறப்பு அழைப்பில் 16 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அவை அனைத்திற்கும் உடனடித் தீர்வு காணப்பட்டது,
சிறுவர். சிறுமியர்களுக்கான அவசர உதவி எண் 1098 என்ற சிறப்பு அழைப்பில் 102 அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு அவை அனைத்தும் உடனடியாக அனைத்து மகளிர் காவல் ஆளிநர்கள் மற்றும் சட்ட ஒழுங்கு காவல் ஆளிநர்களால் உடனடியாக தீர்க்கப்பட்டன.
குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் அளித்ததின் பேரில் இது வரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது,
இந்த ஊரடங்கு காலத்தில் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தொடர்பாக 7 வழக்குகள் பதிவாகியுள்ளன. அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் துரித நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு உடல் மற்றும் உள ரீதியிலான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது, குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகரம் முழுவதும் குடிசைப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளையும். கடினங்களையும் நீக்கும் பொருட்டு தேவையான குடிமைப் பொருட்கள் சுமார் 50,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் சிறுவர், சிறுமியர்களின் மன அழுத்தத்தைப் போக்கும் வகையிலும் அவர்களின் பொழுது போக்கிற்காகவும் அவர்களுக்கு தேவையான வர்ணம் தீட்டும் புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் குறிப்பு புத்தகங்கள் சுமார் 50,000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கரோனா தொற்று கிருமி பாதிப்பு விவரங்களை நகரம் முழுவதும் உடனுக்குடன் சேகரிக்க காவல் மாவட்ட வாரியாக 12 தொடர்பு அதிகாரிகள் காவல் ஆய்வாளர்கள் நிலையில் நியமிக்கப்பட்டு சீரும் சிறப்புமாகப் பணியாற்றி வருகின்றனர்.
சென்னை மாநகரம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மனப் பிரச்சினைகள், குடும்பப் பிரச்சினைகள் மற்றும் உடல், உள ரீதியான பிரச்சினைகளைப் போக்க பிரத்யேகமாக 10 சிறப்பு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு தொலைபேசி முலமாக ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது,
சென்னை மாநகர காவல்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்ற 161 குழந்தைகள் நல அலுவலர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் நிலையில் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் நியமிக்கப்பட்டு சிறுவர், சிறுமியர்கள் பிரச்சினைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்,
சென்னை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் அம்மா ரோந்து வாகனம் முலம் அவரவர் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுக்காவல் செய்து, கரோனா தொற்று பரவாமல் இருக்க ஒலிப்பெருக்கி முலம் பொதுமக்களுக்கு போதிய அறிவுரைகள் வழங்கி வருகின்றனர்,
அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அனைவருக்கும் அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டதின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களில் உடனடியாக சம்மந்தப்பட்ட இடத்திற்கே நேரில் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகின்றனர்”.
இவ்வாறு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.