கனமழையால் மூழ்கிய மதுரை அம்மா திடல் காய்கறி சந்தை - 50 லட்சம் மதிப்புள்ள காய்கறிகள் நாசம்

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் மதுரை சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் அங்கிருந்து மாற்றப்பட்டு அம்மா திடல் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வழக்கம்போல இரவு விற்பனை நடைபெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.


அம்மா திடலில் 150 காய்கறி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வாங்கி செல்வதற்கான வசதி செய்து தரப்பட்டு இருந்தது.


இந்நிலையில் மதுரையில் நேற்று மாலை 4 மணியிலிருந்து தொடர்ந்து ஐந்து மணி நேரத்தை கடந்து பெய்த இடியுடன் கூடிய கனமழையால் அம்மா திட்டம் முழுவதுமாக மழைநீர் சூழ்ந்தது. ஏற்கனவே அந்தந்த கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தும் நீரில் மூழ்கிய நிலையில், இரவு வியாபாரத்தை துவங்க வந்த வியாபாரிகள் காய்கறிகள் மூழ்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


அப்பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்ததால் வியாபாரம் செய்ய இடவசதி இல்லாமல் 150 கடைகளின் நேற்றைய வியாபாரம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது. மாற்று இடம் கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக 150 பேருக்கு இடம் ஒதுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இன்று அதற்கான ஏற்பாடு செய்வதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.


50 லட்ச ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் நீரில் மூழ்கி நாசமான நிலையில், நேற்று ஒருநாள் காய்கறி விற்பனையும் தடைபட்டதால் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான காய்கறி மொத்த விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்