கொரோனா வந்ததற்கு ஆதாரம் இருக்கிறது - அமெரிக்க மந்திரி திட்டவட்டம்...
கொரோனா வைரஸ் தொற்று, சீன நாட்டின் உகான் நகர கடல்வாழ் உயிரின சந்தையில் இருந்த வவ்வாலிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. அதைத் தொடர்ந்து அந்த சந்தை மூடப்பட்டது.
ஆனால் அந்த வைரஸ், இயற்கையாக உருவானது அல்ல, அது உகான் நகரில் உள்ள வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டது, அங்கிருந்து கசிந்துதான் பரவி இருக்கிறது என்று அமெரிக்க டெலிவிஷன் (பாக்ஸ் நியூஸ்) பரபரப்பு செய்தி வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். அத்துடன் அந்த ஆய்வுக்கூடத்துக்கு அளித்து வந்த அமெரிக்க நிதியை டிரம்ப் அதிரடியாக நிறுத்தினார்.
ஆனால் இந்த வைரஸ், உகான் வைரலாஜி இன்ஸ்டிடியூட்டில் உருவாக்கப்பட்டது என்பதற்கான ஆதாரம் எதையும் அமெரிக்கா தரவில்லை, தந்தால் வரவேற்போம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியது.
இந்த நிலையில் உகான் வைரலாஜி இன்ஸ்டிடியுயூட்டில்தான் கொரோனா வைரஸ் உருவானது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.
இதையொட்டி பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் சேனலுக்கு அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ அளித்த சிறப்பு பேட்டியின்போது கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தொற்றினால் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் இறந்து விட்டனர். 12 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனையை செய்து முடித்திருக்கிறோம்.
அமெரிக்காவில் இப்போது நடந்திருப்பது, இங்கு நடந்திருக்கக்கூடாதது.
இந்த கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் இருந்து வந்ததுத்தான் என்பது எங்களுக்கு தெரியும். இது குறித்து சீனர்களுக்கு குறைந்தபட்சம் டிசம்பரில் தெரிந்துவிட்டது. ஆனால் அவர்கள் போதுமான அளவுக்கு இதில் செயல்படவில்லை. உலக சுகாதார நிறுவனமும் சீனாவின் தூண்டுதல்பேரால், அதை உலகளாவிய தொற்றுநோய் என உரிய நேரத்தில் அறிவிக்கவில்லை.
கொரோனா வைரஸ் சிக்கலை உருவாக்கிய விஷயங்கள் இவைதான்.
இன்றும்கூட, நான் இங்கு அமர்ந்திருக்கும்போது, இந்த பேட்டியை காண்கிறபோது, நமக்கு தேவையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த ஆய்வுக்கூடங்களை பார்ப்பதற்கு மேற்கத்தியர்களை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் இன்னும் சீனர்களிடம் தொடர்ந்து வேண்டுகிறோம். இந்த நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதற்கும், இதுபோன்று இனி நடக்காதபடிக்கு தடுப்பதற்கும் எங்களுக்கு தகவல்கள் தேவை.
கொரோனா வைரஸ், உகான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வெளிப்பட்டது என்பதை நம்பிக்கையுடன் டிரம்ப் நிர்வாகம் அறிந்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் சேகரித்த உளவுத்துறை தகவல்கள் குறித்து இப்போது எதுவும் கூற இயலாது. ஆனால் இது தொடர்பாக நாங்கள் உளவுத்தகவல்கள் சேகரித்து இருக்கிறோம். இதில் நாங்கள் நம்பிக்கையும் வைத்துள்ளோம்.
கொரோனா வைரஸ், உகான் வைரலாஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுக்கூடத்தில் இருந்து வந்ததுதான் என்பதற்கான ஆதாரங்களை நான் பார்த்தேன். இதை மறுப்பதற்கான ஆதாரம் கிடைத்தாலும் அதைப்பார்ப்பதில் மகிழ்ச்சிதான்.
நாங்கள் அதன் அடிவரையில் செல்ல விரும்புகிறோம். அதனால்தான் இது தொடர்பான தகவல்களை மேற்கத்தியவர்களுக்கு தர வேண்டும் என்று பல மாதங்களாக கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
அமெரிக்க பத்திரிகையாளர்களை சீனா என்ன செய்தது என்பதை சர்வதேச சமூகம் பார்த்தது. இந்த வைரஸ் குறித்து ஆரம்பத்தில் எச்சரித்த டாக்டர்களை சீனா என்ன செய்தது என்பதை நாம் பார்த்தோம்.
அவர்கள் மீண்டும் காணப்படாத வகையில், அலைந்து திரிந்ததை நாங்கள் கண்டோம். இந்த வகையான நடத்தையை சீன கம்யூனிஸ்டு கட்சி போன்ற சர்வாதிகார ஆட்சியின்போதுதான் பார்த்திருக்கிறோம். அவர்கள் மறைக்கிறார்கள்.
தவறான தகவல்களை பிரசாரமாக செய்கிறார்கள். இதில் அமெரிக்காவை அவர்கள் பொருத்த முயன்றதை நாம் பார்த்தோம். இது போன்ற ஆட்சிகள் செய்யும் விஷயங்கள் அவை. அதனால்தான் ஜனநாயகங்கள் செழித்தன.
சர்வாதிகார ஆட்சிகள் தங்கள் சொந்த மக்களையே கொல்கின்றன. சீனாவிலும் ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்.
உலக சுகாதார நிறுவனம் இதில் தோல்வி கண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் உலக சுகாதார நிறுவனம் குறித்து மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறோம்.
இந்த விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சரியான முடிவை வழங்காதபோது, அந்த அமைப்புக்கு பல கோடி பணத்தை வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உலகளாவிய சுகாதார கொள்கையில் உலக சுகாதார நிறுவனம் முன்னணியில் இருக்க நல்ல வழியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.