ரூ.5-க்கு மருத்துவம்: வடசென்னை மக்களின் காப்பான் -மருத்துவர் திருவேங்கடம் மறைவால் வேதனையில் மக்கள்

சென்னை வியாசர்பாடி அருகே கல்யாணபுரம் பகுதியில் வீரராகவன், ராதா தம்பதிக்கு முதல் மகனாய் பிறந்தவர் திருவேங்கடம். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த திருவேங்கடம் அரசுப் பள்ளியில் படித்து அரசுக் கல்லூரியில் மருத்துவம் முடித்தவர்.


வடசென்னை மக்களின் வாழ்கையைப் பார்த்துப் பார்த்து வளர்ந்த திருவேங்கடம், தங்கள் பகுதி மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.


இதன் விளைவால் அரசு மருத்துவராகப் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தும் அதை உதறித்தள்ளிவிட்டு, கல்யாணபுரத்தில் சிறிய கிளினிக் வைத்து ஏழை எளிய மக்களுக்கு 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கத் தொடங்கினார்.


நாம் பயன்படுத்தும் அத்தனை பொருட்களின் விலையும் பன்மடங்கு உயர்திருப்பது போல் மருத்துவம் பார்பதற்காக இவர் வாங்கும் கூலியும் உயர்ந்தது. எவ்வளவு தெரியுமா..? 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் 3 ரூபாய் விலை உயர்த்தி 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்துவந்தார். ஒரு நாள் இரண்டு நாள் அல்ல, கடந்த 40 ஆண்டுகளாக வியாசர்பாடி மக்களுக்கு 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்தவர் திருவேங்கடம்.


பெரும்பாலும் அன்றாட கூலி செய்தால்தான் பிழைப்பு என வாழும் மக்களுக்கு இவரின் சேவை வரப்பிரசாதமாக அமைந்திருந்து. 5 ரூபாய் டாக்டர் என மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட திருவேங்கடம் மாரடைப்பால் தனது 70 வயதில் காலமானர்.


திருவேங்கடத்தின் மறைவுச் செய்தி வியாசர்பாடி மக்களை சோகத்தில் ஆழ்தியுள்ளது. தன்னிடம் வரும் நோயாளிகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போல் நினைத்துப் பழகும் திருவேங்கடம் மருத்துவம் மட்டும் இல்லாமல் சொந்த வாழ்விலும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவியிருக்கிறார்.


குழந்தைகள் மீது அதீக காதல் கொண்ட திருவேங்கடம் வியாசர்பாடியில் உள்ள குழந்தைகளின் கல்வியிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.


தனக்கு காய்ச்சல் ஏற்பட்டபோதும், தனது பாட்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போதும் மருத்துவம் பார்த்து குணப்படுத்தியதை நினைவுகூரும் 5ம் வகுப்பு மாணவன் சர்வேஷ், தானும் திருவேங்கடத்தைப் போல் மருத்துவம் படிக்க விருப்பப்படுவதாகக் கூறினார். திருவேங்கடத்தின் உடல் கெல்லீஸில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளதால் முழு ஊரடங்கு காரணமாக வியாசர்பாடி மக்கள் அவரைப் பார்க்க முடியாத வேதனையில் உள்ளனர்.


தன் நலம் பாராது மருத்துவத்தை மக்கள் சேவை எனக் கருதி தொண்டாற்றிய ஒற்றை மனிதர் பலரின் வாழ்வை மாற்றியமைத்திருக்கிறார். மறைந்தாலும் அவர் வியாசர்பாடி மக்களின் மனதில் மக்கள் மருத்துவராக வாழ்த்து கொண்டிருப்பார்.


திருவேங்கடத்தின் உடல் வியாசர்பாடி அருகே உள்ள முல்லை நகர் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்