ரூ.15 கோடி மதிப்பிலான செல்போன்கள்.. ஓட்டுநர்களை தாக்கிவிட்டு கொள்ளை..!
சென்னை அருகே பூந்தமல்லியில் இருந்து செல்போன்கள் ஏற்றி வந்த லாரியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நள்ளிரவில் மடக்கி, ஓட்டுநர்களைத் தாக்கிவிட்டு 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர மாநிலத்தில் செல்போன் ஏற்றிச் சென்ற கண்டெய்னர் லாரியை மடக்கி, ஓட்டுநர்களை தாக்கிவிட்டு 12 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீரன் பட பாணியில் அரங்கேறிய கொள்ளைச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளும் வெளியாகின.
தற்போது அதே பாணியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையை அடுத்த பூந்தமல்லியிலிருந்து 15 கோடி ரூபாய் மதிப்பிலான ரெட்மி நிறுவன செல்போன்களை ஏற்றிக்கொண்டு 2 ஓட்டுநர்களுடன் கண்டெய்னர் லாரி ஒன்று மும்பை நோக்கி சென்றுள்ளது.
நள்ளிரவு ஒரு மணியளவில் சூளகிரி அருகே மேலுமலை என்னுமிடத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக லாரியை அவர்கள் சாலையோரமாக நிறுத்தியுள்ளனர்.
அப்போது திடீரென வந்த ஒரு கும்பல், இருவரையும் கொடூரமாகத் தாக்கிவிட்டு லாரியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. அழகுபாவி என்ற இடத்தில் லாரியை நிறுத்தி அதிலிருந்த செல்போன்களை மற்றொரு கண்டெய்னர் லாரிக்கு மாற்றி அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
காயமடைந்த ஓட்டுநர்கள் இருவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.