ஹைதராபாத் -ஏரிகள் உடைப்பால் வெள்ளப் பெருக்கு.. தத்தளிக்கும் தலைநகரம்
ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏரிகள் உடைப்பு ஏற்பட்டதால், நகரின் பல பகுதிகளுக்குள் வெள்ளம் பாய்ந்தது.
ஹைதராபாதில் கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதில் நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ஏற்கனவே இரண்டு ஏரிகளில் உடைப்பெடுத்த நிலையில் மூன்றாவது ஏரியும் கரையில் உடைப்பெடுத்ததால் ஊருக்குள் வெள்ளம் புகுந்தது. வாகனங்கள் நீரில் மூழ்கிய நிலையில் போக்குவரத்து முடங்கியது. ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியானதையடுத்து ஹைதரபாத் மக்கள் அச்சத்தில் வீடுகளில் முடங்கினர்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியுள்ளனர். இரு சக்கர வாகனத்துடன் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரை மீட்புப் படையினர் பெரும் சாகசத்துடன் மீட்டனர்.
மழை வெள்ளத்தால் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் சேதம் அடைந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதுவரை 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.நேற்று 150 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக கணித்துள்ள வானிலை ஆய்வு மையம் இன்றும் தெலுங்கானாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் என்று எச்சரித்துள்ளது