ஒட்டகம் பாலில் மில்க் ஷேக் கேட்ட வம்பன்கள் கைது..! கஞ்சா போதையில் கலாட்டா
புதுச்சேரி அரியாங்குப்பத்தில் டீக்கடை பேக்கரி ஒன்றில் ஒட்டகப்பாலில் மில்க் சேக் கேட்டு கலாட்டா செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். கஞ்சா போதையில் காமெடி செய்ய நினைத்து கலாட்டாவில் சிக்கி கம்பி எண்ணும் வம்பர்கள் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் பேக்கிரி மற்றும் டீக்கடைக்கு 10ந்தேதி இரவு சென்ற 3 பேர் ஒட்டகம் பாலில் மில்க் ஷேக் கேட்டுள்ளனர்.
ஒட்டகம் பால் இல்லை என்று ஊழியர்கள் தெரிவிக்க, ஏன் இல்லை ? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கடையில் இருந்த பொருட்களை எல்லாம் ஊழியர்கள் மீது தூக்கி அடித்துள்ளனர். அவர்களை தடுக்க முயன்ற ஊழியர்களையும் தாக்கிவிட்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்
இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த கோகுல், உதயா, முருகவேல் ஆகிய 3 பேர் கஞ்சா போதையில் கடைக்கு வந்து ஒட்டகம் பாலில் மில்க் ஷேக் கேட்டு தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர். ஒட்டகப் பாலுக்கு ஆசைப்பட்ட மூவரின் முகத்திலும் கவசத்தை மாட்டி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டிவியில் நகைச்சுவை காட்சி ஒன்றை பார்த்து விட்டு கஞ்சா போதையில் வந்த மூவரும், காமெடியென நினைத்து கடையில் வலியச்சென்று வம்பிழுத்து கலாட்டா செய்ததால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.