போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்துசெய்ய கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்..
வாகன புகை பரிசோதனை கருவி குறித்து போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வழக்குத் தொடர்ந்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வாகன புகை பரிசோதனை கருவிகளைத் தயாரிக்கும் 12 நிறுவனங்கள் உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள நிறுவனத்தின் வாகன புகை பரிசோதனை கருவிகளை புகை பரிசோதனைக்கு பயன்படுத்தலாம் என மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை வெளியிட்டார்.
குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி, போக்குவரத்து ஆணையரின் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ஆணையர் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்
மேலும், தவறான குற்றச்சாட்டுக்களுடன் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அந்த தொகையை சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு 4 வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.