உலக நாயகன் கமலஹாசனுக்கு இன்று 66-வது பிறந்தநாள்...!
தமிழ் சினிமாவின் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமலஹாசன் இன்று தனது 66வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமா எத்தனையோ நடிகர்களை கடந்து வந்திருக்கிறது. ஆனால் கமலஹாசன் ஒரு முழுமையான கலைஞன். நடிப்பு, எழுத்து, இயக்கம் நடனம், இசை என எல்லாத்துறையிலும் கற்றுத்தேர்ந்த கமலஹாசன் தமிழ் சினிமாவின் சகாப்தமாக உயர்ந்து நிற்கிறார். 66 ஆண்டு கால வாழ்க்கையில் 60 ஆண்டுகளை கலைக்காகவே அர்ப்பணித்து கலைச்சேவை ஆற்றி வரும் கமலஹாசன் 3 தேசிய விருதுகள், 19 பிலிம்பேர் விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ, செவாலியர் விருது என வேறு எந்த நடிகராலும் நெருங்க முடியாத அங்கீகாரங்களோடு உயர்ந்து நிற்கிறார்
1960ஆம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போதே அந்த திரைப்படத்திற்காக கமலஹாசனுக்கு குடியரசுத் தலைவரின் சிறப்பு விருது தேடி வந்தது. முதல் படத்தை விருதுடன் துவங்கிய கமலஹாசன் ஒவ்வொரு திரைப்படத்தையும் அங்கீகாரத்துடனே நிறைவு செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி ஒவ்வொரு திரைப்படத்திலும் தனது உழைப்பை கொட்டி வருகிறார்.
குழந்தை நட்சத்திரமாக பார்த்தால் பசி தீரும், பாதகாணிக்கை பல திரைப்படங்களிலும் நடித்த கமலஹாசன், மீண்டும் நாயகனாக நடிக்கும் வயது வரும்வரை உதவி இயக்குனர், நடன இயக்குனர் என சினிமாவிற்குள் உள்ள நுட்பங்களை கற்று தேர்ந்தார். மலையாள திரைப்படங்கள் மூலம் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய கமல், மீண்டும் நாயகன் வாய்ப்பு கிடைத்து தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய பின்னர் தொடர்ந்து வெற்றித் திரைப்படங்கள் அடுத்தடுத்து கொடுத்து அசத்தினார்.
இலக்கணங்களை உடைப்பதில் அலாதி பிரியம் கொண்ட கமலஹாசன் மிடுக்கான நாயகனாக நடித்து வந்த காலகட்டத்தில் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே திரைப்படத்தில் கோமணத்துடன் சப்பாணியாக நடித்து பலரையும் ஆச்சரியப்படுத்தினார். ஒட்டுமொத்த கதாநாயகன் பிம்பமும் இதன் மூலம் சிதைந்து விடும் என நண்பர்கள் எச்சரித்த போதும் கமலஹாசன் நடிப்பின் மீது கொண்ட தீராத காதலினால் சப்பாணியாக வெற்றி பெற்று தமிழ் ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.
தொடர்ந்து ஆண்டிற்கு 10 திரைப்படங்கள் வரை சராசரியாக நடித்த கமலஹாசன் குரு போன்ற ஜனரஞ்சகமான வர்த்தக திரைப்படங்களிலும் விக்ரம் போன்ற புதிய அறிவியல் திரைக்கதை முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். சத்யா, மகாநதி, குணா என ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று, அந்தந்த கதாபாத்திரங்களுக்காக கமலஹாசன் வெளிப்படுத்திய உடல்மொழி கமலுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொடுத்தது.
1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த இந்தியன் திரைப்படம் அதுநாள் வரை தமிழ் திரையுலகில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை படைத்தது. இதன் மூலம் நடிப்பில் மட்டுமல்லாமல் வசூலிலும் தனக்கு நிகராக யாருமில்லை என்பதை கமலஹாசன் அந்த ஆண்டில் நிரூபித்துக் காட்டினார்.
இதன் பின்னர் நகைச்சுவை திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிய கமல்ஹாசன் அவ்வை சண்முகி, தெனாலி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் என தனக்கென ஒரு புது பாணியை உருவாக்கினார். இடையிடையே ஆளவந்தான், ஹேராம், அன்பே சிவம் போன்ற திரைப் படங்களில் வித்தியாசமான தன் நடிப்பையும் வெளிப்படுத்த தவறாத கமலஹாசன் கிராபிக்ஸில் ஆளவந்தானில் செய்த புதிய முயற்சி, விருமாண்டி திரைப்படத்தில் பகலிலேயே படமாக்கிய இரவு காட்சி, டிஜிட்டலில் படமாக்கிய மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி திரைப்படத்தின் மூலம் லைவ் ஆடியோ என தமிழ் சினிமாவிற்கு முன்னோடியாக பல புதிய முயற்சிகளையும் முன்னெடுத்துச் சென்ற வண்ணம் இருந்தார்.
தசாவதாரம் திரைப்படத்தில் பத்து கதாபாத்திரங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன் தசாவதாரம் திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியதன் மூலம் நடிப்பிலும் எழுத்திலும் தனது உச்சகட்ட ஆற்றலை உலகிற்கு பறை சாற்றினார் கமலஹாசன்.
தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது அழுத்தமான தடத்தைப் பதித்துக் கொண்டே இருக்கும் கமலஹாசன் மொழிகளை கடந்து உலக அரங்கில் இந்திய திரை உலகின் முகங்களில் ஒருவராக திகழ்கிறார்.