விமான டிக்கெட்டில் மோசடி! பண ஆசையால் கைதியான எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்!
விமான டிக்கெட் முறைகேடு குற்றச்சாட்டில் டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மீர் முஸ்தாபா உசேனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 2006 -2009 ம் ஆண்டு வரை துணைவேந்தராகப் பணியாற்றியவர் மீர் முஸ்தபா உசேன். இவர், துணைவேந்தராகப் பணியில் இருந்த போது 25.5.2008 முதல் 30.5.2008 வரை வாஷிங்டனில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் விமானத்தில் சென்றுள்ளார். இதற்காக, முதல் வகுப்பு இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு விமான கட்டணமாக ரூ. 2,99,673 பல்கலை சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
ஆனால், டிக்கெட்டை ரத்து செய்து விட்டு சாதாரண இருக்கையில் மீர் முஸ்தபா வாஷிங்டனுக்குப் பயணம் செய்துள்ளார். அதே வேளையில், உயர் வகுப்புக்கான டிக்கெட்டில் பயணம் செய்ததாக கூறி பணம் பெற்றுள்ளார்.
அதே போல், இங்கிலாந்து, நார்வே, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள விமானத்தில் சென்று வந்த வகையில் டிக்கெட் கட்டணமாக ரூ. 7,82,124 மோசடியாக பல்கலைக்கழகத்தில் இருந்து மீர் முஸ்தபா உசைன் பெற்றுள்ளார்.
விமான டிக்கெட் முறைகேட்டின் மூலமாக பல்கலைக்கழகத்தின் நிதியை முறைகேடாக பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி மீர் முஸ்தபா உசேன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஓம்பிரகாஷ், லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்த குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளது. எனவே, அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 24 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பாளித்தார்