ராஜ்யசபா எம்.பி... ரஜினி மறுத்தால், குஷ்பூ அல்லது அண்ணாமலை..- கர்நாடகத்தை வைத்து பா.ஜ.க புது திட்டம்
நடிகர் ரஜினிகாந்துக்கு ராஜ்யசபா எம்.பி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினி மறுக்கும்பட்சத்தில் குஷ்பூ அல்லது அண்ணாமலைக்கு வழங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகத்திலிருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டிருந்த அசோக் கஸ்தி செப்டம்பர் மாதத்தில் கொரோனா தொற்றால் இறந்தார். தற்போது,அங்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்த பதவிக்கு வரும் டிசம்பர் 1 - ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .
காலியாக உள்ள இடத்துக்கு யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது குறித்து பாஜக தலைமை ஆலோசித்து வருகிறது .கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து பிற மாநிலத்தை சேர்ந்தவர்களை மாநிலங்களவை உறுப்பினராகதேர்ந்தெடுப்பது புதியதல்ல . தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகத்திலிருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்தான்.அதனால், ரஜினிகாந்துக்கு எம்.பி. பதவி கொடுக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சி தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரஜினிகாந்த்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் வருகிறதாம். ஆனால், ரஜினிகாந்த் இறுதி முடிவை சொல்லவில்லை என்று சொல்லப்படுகிறது.
ஒரு வேளை , ரஜினிகாந்த் மறுக்கும் பட்சத்தில் நடிகை குஷ்பூ அல்லது முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை இருவரில் ஒருவருக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். இந்த மூன்று பேருமே கர்நாடக மாநிலத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகத்தில் வாழ்ந்தவர். நடிகை குஷ்பூ கன்னட படமான ரணதீராவில் அறிமுகமாகி கன்னட மக்களிடத்தில் மிகவும் பரிச்சயமானவர். அண்ணாமலை ஐ.பி.எஸ் கர்நாடக மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி அந்த மக்களின் நன்மதிப்பை பெற்றவர். இதனால், இவர்கள் மூன்று பேரில் யாரை நியமித்தாலும் எந்த பிரச்னையும் இருக்காது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைமை கருதுவதாக நம்பத்ததகுந்த வட்டாரங்கள் கூறிகின்றன.
கடந்த ஜூன் மாதத்தில் நடந்த எம்.பி தேர்தலின் போது கர்நாடக மாநில பா.ஜ.க சார்பில் சில வேட்பாளர்களின் பட்டியலை அந்த கட்சியின் மத்திய தேர்தல் பணிக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த பட்டியலை நிராகரித்த தேசியத் தலைமை யாருமே எதிர் பார்க்காத வேட்பாளர்களை அறிவித்தது . அதில் ஒருவர்தான் அசோக் கஸ்தி. அதனால், இப்போதும் ஆச்சரியப்படும் வகையில் , பாரதிய ஜனதா கட்சியின் அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.